Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 'விளைவுகள் வேறு மாதிரி இருக்கும்': கவர்னருக்கு தயாநிதி எச்சரிக்கை

'விளைவுகள் வேறு மாதிரி இருக்கும்': கவர்னருக்கு தயாநிதி எச்சரிக்கை

'விளைவுகள் வேறு மாதிரி இருக்கும்': கவர்னருக்கு தயாநிதி எச்சரிக்கை

'விளைவுகள் வேறு மாதிரி இருக்கும்': கவர்னருக்கு தயாநிதி எச்சரிக்கை

ADDED : ஜன 08, 2025 06:07 AM


Google News
Latest Tamil News
சென்னை : கவர்னர் ரவி பதவி விலக வலியுறுத்தி, தமிழகம் முழுதும், நேற்று தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைத்து இடங்களிலும், கவர்னரை கண்டித்து, கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சென்னை, சைதாப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி பேசியதாவது:

தமிழர்களின் உணர்வுகளை, கவர்னர் ரவி கொச்சைப்படுத்தி வருகிறார். அவர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.

திரும்ப பெறுங்கள்


இன எதிரிகளை புறமுதுகு காட்டி ஓடவிட்ட கட்சி தி.மு.க.,. இன்று கவர்னரும் அப்படி தான் ஓடியிருக்கிறார். நாட்டின் அரசியலமைப்பு குறித்து, நாட்டு மக்களுக்கு பாடம் கற்றுத்தரும் எங்களுக்கு யாரும் பாடம் கற்றுத்தர வேண்டாம்.

தமிழகத்தில் ரவி கவர்னராக இருந்தால், பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம், கண்டிப்பாக குறைந்து விடும். பா.ஜ., ஒரு ஓட்டுக் கூட வாங்க முடியாது. அதனால் தான் கவர்னரை திரும்ப பெறுங்கள் என சொல்கிறோம். தமிழகத்திற்கு நீங்கள் வேண்டாம் என, உங்களின் நலனுக்காகவே சொல்கிறோம்.

அரசியல் பேச வேண்டிய தேவையோ, அவசியமோ, கவர்னருக்கு இல்லை. நாவை அடக்குங்கள்; உங்கள் நடத்தையை சரி செய்து கொள்ளுங்கள். தமிழகத்தை மதிக்கா விட்டால் ஓடஓட விரட்டப்படுவீர்கள். அந்த நாள் வெகு விரைவில் வரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், ''மிகுந்த திமிருடன் கவர்னர் ரவி செயல்படுகிறார். தேசிய கீதத்தை அவமதித்தவர் கவர்னர் ரவி.

இந்தியாவின் தலைசிறந்த முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். அந்த வயிற்றெரிச்சல் தாங்காமல், கவர்னர் என்னென்னவோ செய்கிறார். அவரது செயல்கள், முதல்வரின் புகழை கூடுதலாக உச்சமடைய செய்யும்,'' என்றார்.

தயாநிதி மாறன் எம்.பி., பேசியதாவது:

கவர்னர் உரையை, முதல்வர் தலைமையில், அமைச்சரவை கூடி முடிவு செய்யும். அதைத்தான் அவர் பேச வேண்டும். ஒரு கமா கூட கவர்னரால் போட முடியாது.

இதில் தலையிட ஜனாதிபதிக்கு கூட உரிமை இல்லை. இவர் ஓய்வு பெற்று, தமிழகத்திற்கு வந்திருக்கிறார். ஏதேனும் வேலை கொடுங்கள் என கெஞ்சி கேட்டு, இங்கு வந்திருக்கிறார்.

எந்த தைரியத்தில் நம் தலைவரை எதிர்க்கிறார் என புரியவில்லை. ஒன்றும் பிடுங்க முடியாது. நாங்க விட்டு விடுவோமா. தமிழகத்திற்கு வந்தால், நாங்கள் சொல்வதைத்தான் செய்ய வேண்டும். நீயா எதுவும் செய்ய முடியாது.

எங்கள் செலவில், பெரிய அரண்மனையை தந்துள்ளோம். அங்கு உங்கள் இஷ்டப்படி நடக்கலாம். துாங்கலாம். ஆனால், தமிழக சட்டசபைக்கு வந்து விட்டால், முதல்வர், அமைச்சரவை கூறுவதைத்தான் செய்ய வேண்டும்.

மன்னிக்க மாட்டர்


முதலில் செய்தாய் அல்லவா. தற்போது பதவி முடிந்து விட்டது. பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக, எங்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப்படுத்துகிறாய். இதுபோல் தொடர்ந்து செய்தால், தமிழக மக்கள் உன்னை மன்னிக்க மாட்டார்கள். இதன் விளைவு, பின்னணி வேறு மாதிரி இருக்கும்.

இவ்வாறு, அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us