40 நாடுகளுடன் ஏற்றுமதியை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை : அண்ணாமலை தகவல்
40 நாடுகளுடன் ஏற்றுமதியை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை : அண்ணாமலை தகவல்
40 நாடுகளுடன் ஏற்றுமதியை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை : அண்ணாமலை தகவல்
UPDATED : செப் 01, 2025 07:53 AM
ADDED : செப் 01, 2025 07:18 AM

கோவை: ''அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு பாதிப்புதான். அதை சரிசெய்ய மத்திய அரசு, 40 வெளிநாடுகளுடன் ஏற்றுமதியை ஏற்படுத்த, நடவடிக்கை எடுத்துள்ளது; ஒரு சில வாரங்களில், ஏற்றுமதியாளர்களின் நெருக்கடி தீரும்,'' என பா.ஜ.முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவையில் அவர் அளித்த பேட்டி:
சங்கர் ஜிவால் பணி ஓய்வு பெறப்போகிறார் எனத் தெரிந்தும், புதிய டி.ஜி.பி.யை நியமிக்காமல், தமிழக முதல்வர் வெளிநாடு சென்றுள்ளார். எட்டு மூத்த அதிகாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். பொறுப்பு டி.ஜி.பி. பதவியேற்பில், அவர்கள் பங்கேற்கவில்லை.
பொறுப்பு டி.ஜி.பி. என்பதே ஒரு சட்டத்துக்கு புறம்பான விஷயம். உடனடியாக டி.ஜி.பி.யை நியமிக்க வேண்டும். தி.மு.க. அரசுக்கு எதிரான போலீஸ் அதிகாரிகள் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க. அரசு வந்ததில் இருந்து, 7 சதவீத மாணவர்கள் அரசு பள்ளியில் இருந்து தனியார் பள்ளிக்கு சென்றுள்ளார்கள். 'உங்களுடன் ஸ்டாலின்' மனுக்களை ஆற்றில் போட்டுள்ளனர். இந்த திட்டமே ஒரு மோசடி திட்டம்.
எதற்காக தீயணைப்பு துறையில் புதிய பதவியை ஏற்படுத்துகிறார்கள். அரசியலை காவல்துறையில் கலப்பது தி.மு.க. தான். உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி கேட்டால், எந்த பதிலும் சொல்வதில்லை. முதல்வர் வெளிநாடு சென்று போட்டோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஏமாற்றுகிறார். அவர் ஜெர்மனி செல்ல வேண்டிய தேவை என்ன.
தொழில் முதலீடுகளை ஏற்க, மத்திய அரசு உள்ளதே. வெளிநாடு சென்று எவ்வளவு முதலீடுகளை ஈர்த்தார் என்பதற்கான வெள்ளை அறிக்கை வேண்டும். அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு பாதிப்பு தான். ஆனால், அதை சரிசெய்ய மத்தியஅரசு, 40 வெளிநாடுகளுடன் ஏற்றுமதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
டிரம்ப் விதித்த, 50 சதவீத வரி விதிப்பை யாரும் ஏற்க மாட்டார்கள். சீன அதிபர், இந்திய பிரதமர் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆசிய கலாசாரத்தில் இரு நாடுகள் நண்பர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்தியாவும், சீனாவும் சண்டை போடக்கூடாது என, சீன அதிபர் உணர்ந்துள்ளார். வருகின்ற நூற்றாண்டு ஆசிய கண்டத்தின் நூற்றாண்டு. இந்தியாவும், சீனாவும் இறங்கி வரும் போது, நம்மை எந்த நாடு கைக்கூலியாக மாற்ற நினைத்தாலும், அவர்களுக்கு படிப்பினையாக அமையும்.
இது, மற்ற உலக நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கை மணி. இந்தியாவை நசுக்க நினைத்தால் நமக்கும் வழி தெரியும் என்பதை, பிரதமர் காட்டிக் கொண்டிருக்கிறார். நிச்சயமாக இந்தியாவுக்கு நல்லது நடக்கும். இன்னும் ஒரு சில வாரங்களில், ஏற்றுமதியாளர்களின் நெருக்கடி தீரும்.
இவ்வாறு, கூறினார்.
'அரசியல்ல இதெல்லாம் இருக்குறது தாங்கண்ணா'
முன்னதாக, நேற்று(நேற்று முன்தினம்) சென்னையில் நடந்த பா.ஜ. நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலையை சுற்றியே, அதிக புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அது குறித்த கேள்விக்கு, ''அதெல்லாம் விடுங்கண்ணா. அரசியலில் இதெல்லாம் இருக்குறது தாங்கண்ணா. நாலு பேர் நல்லவர்னு சொல்லுவாங்க; நாலு பேர் கெட்டவர்னு சொல்லுவாங்க,'' என்றார் அண்ணாமலை. மேலும் அவர் கூறுகையில், ''நான் இக்கட்சியின் தொண்டன். தொண்டனுக்கு கட்சித் தலைமை, தலைவர்கள் முடிவெடுத்துள்ளதை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
தொண்டர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தால், கட்சி கட்டுக்கோப்போடு இருக்க முடியாது. மேடைக்கு செல்லும் போது வாசன் அமர கூறிய இடத்தில் அமர்ந்தேன். அரசியல் எதுவும் கிடையாது. அனைவரின் மீதும் எனக்கு அன்பு, பாசம் உள்ளது. தனிப்பட்ட முறையில் தி.மு.க.விடம் ஆற்றாமை இருந்தாலும், அக்கட்சி அமைச்சர்களை பார்த்தால் மரியாதை அளிப்பது வழக்கம்,'' என்றார்.