10 ஆண்டுகளாகியும் ஒரு மெகா வாட் கூட சொந்த மின் உற்பத்தியை துவக்காத வாரியம்
10 ஆண்டுகளாகியும் ஒரு மெகா வாட் கூட சொந்த மின் உற்பத்தியை துவக்காத வாரியம்
10 ஆண்டுகளாகியும் ஒரு மெகா வாட் கூட சொந்த மின் உற்பத்தியை துவக்காத வாரியம்
ADDED : செப் 11, 2025 01:46 AM
சென்னை:மின் வாரியம் ஐந்து அனல் மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டும், கடந்த 10 ஆண்டுகளாக, 1 மெகா வாட் மின் உற்பத்தியை கூட துவக்கவில்லை.
திருவள்ளூர், துாத்துக்குடி, சேலம் மாவட்டங்களில், மின் வாரியத்திற்கு 4,320 மெகா வாட் திறனில் ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன. தமிழக மின் தேவையை பூர்த்தி செய்வதில், இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
எதிர்கால மின் தேவையை பூர்த்தி செய்ய, திருவள்ளூர் மாவட்டத்தில் வட சென்னை - 3, எண்ணுார் சிறப்பு; எண்ணுார் விரிவாக்கம்; துாத்துக்குடியில் உடன்குடி; ராமநாதபுரத்தில் உப்பூர், 5,700 மெகா வாட் திறனில் அனல் மின் நிலையங்களை மின் வாரியம் அமைத்து வருகிறது.
இவற்றின் கட்டுமான பணிகள் 2014 - 16ம் காலகட்டத்தில் துவங்கின. கடந்த 2020 - 21ல் மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டது. வட சென்னை - 3 மின் நிலையத்தில், 2024 மார்ச்சில் சோதனை மின் உற்பத்தி துவங்கியது.
அங்கு இதுவரை, 72 மணி நேரம் தொடர்ந்து முழு திறனான, 800 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படவில்லை. இதனால், அந்த மின் நிலையத்தில், வணிக மின் உற்பத்தி துவங்கியதாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
எண்ணுார் சிறப்பு, உடன்குடி மின் நிலையங்களில் கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் முடிந்த நிலையில், உப்பூர், எண்ணுார் விரிவாக்க மின் நிலைய பணிகள், 30 சதவீதத்துடன் ஐந்து ஆண் டு களாக முடங்கியுள்ளன.
நீண்ட இழுபறிக்கு பின், உடன்குடியில் கடந்த மாதம் மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டது.
இன்னும் பணிகள் முடிவடையவில்லை. தலா, 600 மெகா வாட் திறனில், இரு அலகுகள் உடைய வட சென்னை விரிவாக்க மின் நிலையத்தில், 2014 மார்ச், மே மாதங்களில் வணிக மின் உற்பத்தி துவங்கியது. அதற்கு பின், கடந்த 10 ஆண்டுகளாக, புதிய மின் நிலையங்களில், 1 மெகா வாட் கூட மின் உற்பத்தி துவக்கப்படவில்லை.
இது குறித்து, மின் வாரிய பணியாளர்கள் கூறியதாவது:
சொந்த நிதி இல்லாததால், அனைத்து மின் திட்டங்களும், மத்திய அரசின் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கி மேற்கொள்ளப்படுகின்றன. குறித்த காலத்தில் பணிகளை முடிக்காததால், கடனுக்கான வட்டி செலவு அதிகரிக்கிறது.
எனவே, தொடர் ஆய்வு களின் வாயிலாக, மின் திட்ட பணிகளை குறித்த காலத்தில் முடிக்க, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.