ADDED : பிப் 10, 2024 01:42 AM

ஸ்ரீவில்லிபுத்தூர்:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று அதிகாலை 5:20 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை மட்டுமே அனுமதி என வனத்துறை அறிவித்திருந்த நிலையில் ஏராளமானோர் வந்தபடி இருந்ததால் 1:00 மணியை கடந்தும் அனுமதியளிக்கப்பட்டது. 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மலையேறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
கோயிலில் மதியம் 12:00 மணி முதல் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகளை பூஜாரிகள் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
மலையில் கோயில் நிர்வாகத்தின் சார்பிலும், அடிவாரத்தில் தனியார் அன்னதான மடங்கள் சார்பிலும் பக்தர்களுக்கு தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கப்பட்டது.
வத்திராயிருப்பு, சாப்டூர் வனத்துறையினர், போலீசார் மலையடிவாரம் முதல் கோயில் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து நகரங்கள், மதுரையில் இருந்தும் இங்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.