ஜவுளி, ஆடை வர்த்தகம் இரட்டிப்பாகும்; ஏ.இ.பி.சி., துணைத்தலைவர் நம்பிக்கை
ஜவுளி, ஆடை வர்த்தகம் இரட்டிப்பாகும்; ஏ.இ.பி.சி., துணைத்தலைவர் நம்பிக்கை
ஜவுளி, ஆடை வர்த்தகம் இரட்டிப்பாகும்; ஏ.இ.பி.சி., துணைத்தலைவர் நம்பிக்கை
ADDED : செப் 15, 2025 12:38 AM

திருப்பூர்; 'ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பால், ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இரட்டிப்பாகும்' என, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) துணை தலைவர் சக்திவேல் கூறியுள்ளார்.
வரி சீரமைப்பு தொடர்பாக தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகள் சென்னையில் நேற்று நடத்திய மாநாட்டில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், சக்திவேல் வழங்கிய கடிதம்:
ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பால், வரிவிதிப்பு எளிதானதுடன், செலவுகளும் குறைந்துள்ளது. இந்திய ஆடை மற்றும் ஜவுளித் துறையின் போட்டித்தன்மைக்கு ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கிறது. ஜி.எஸ்.டி., பல மறைமுக வரிகளுக்குப் பதிலாக, எளிமையான வரி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
நார், நுால் மற்றும் துணி நிலைகளில் உள்ள முரண்பாடுகளை சரிசெய்து, ஜவுளி உற்பத்தி மற்றும் வர்த்தக நடைமுறையில், செலவுகள் குறைந்துள்ளன; செயல் திறன் அதிகரித்துள்ளது; சர்வதேச போட்டியை சமாளிக்கும் திறன் அதிகரிக்கும்.
வெளிப்படையான மற்றும் எளிமையாக்கப்பட்ட ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு, வணிக நடவடிக்கையை முறைப்படுத்தி, ஊக்குவிக்கிறது. ஆடை மற்றும் மூலப்பொருட்கள் மீதான விலை குறையும், வினியோகமும் எளிதாகும். ஜவுளி, ஆடை, தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்தி வேகமடைந்து, வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.
ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் வாயிலாக, 2030ம் ஆண்டுக்குள், ஜவுளி மற்றும் ஆடை வர்த்தகம் இரட்டிப்பாகும்; இந்தியாவின் இலக்கு நிச்சயம் எட்டப்படும். மறுசீரமைப்பின் வாயிலாக, செயற்கை நுாலிழைகள் வரி, 18 சதவீதமாக இருந்தது, 5 சதவீதமாக குறைந்துள்ளது; நுால் விலையும், 12 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறையும். சாயக்கழிவு பொது சுத்திகரிப்பு சேவைக்கான வரியும், 12 சதவீதமாக இருந்தது; 5 சதவீதமாக குறைந்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் வரியும், 12 சதவீதமாக இருந்தது; 5 சதவீதமாக குறைந்துள்ளது. இதன்மூலம், சர்வதேச அளவிலான, பசுமை சார் உற்பத்தி மீதான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியும்.
குறு, சிறு, நடுத்தர தொழில்களை வலுப்படுத்தும். உலகளாவிய ஆடை சந்தைகளில் இந்தியா புதிய பலத்துடன் போட்டிகளை சமாளிக்கும்; உற்பத்தி செலவுகள் குறைவதுடன், பணப்புழக்கமும் மேம்படும்; ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சிக்கு, வலுவான உத்வேகத்தை வழங்கும்.
இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.