டீக்கடை பெஞ்ச்: போலி சான்றிதழ் விசாரணை முடக்கம்
டீக்கடை பெஞ்ச்: போலி சான்றிதழ் விசாரணை முடக்கம்
டீக்கடை பெஞ்ச்: போலி சான்றிதழ் விசாரணை முடக்கம்
ADDED : பிப் 25, 2024 01:04 AM

இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''பத்திரிகையாளர்களை அலைய விடுறாருங்க...'' என, பெஞ்ச் பேச்சை
ஆரம்பித்தார், அந்தோணிசாமி.
''யாருவே அது...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''தஞ்சாவூர் மாநகராட்சி மேயரா தி.மு.க.,வைச் சேர்ந்த ராமநாதன் இருக்காரு... இவர், மாநகராட்சியின் ஓராண்டு சாதனைகளை, 2023 மார்ச் மாதம், முன்னணி நாளிதழ்கள்ல ஒரு பக்க அளவுக்கு விளம்பரமா குடுத்தாருங்க...
''இந்த விளம்பரங்களை, அந்தந்த நாளிதழின் உள்ளூர் பத்திரிகையாளர்கள் தான் வாங்கி குடுத்திருக்காங்க...
கிட்டத்தட்ட ஒரு வருஷம் கடந்தும், இதுக்கான பணத்தை இன்னும் தரலைங்க...
''பத்திரிகையாளர்கள், மாநகராட்சி கமிஷனரிடம் கேட்டதுக்கு, 'மேயரிடமே போய் கேளுங்க'ன்னு பந்தை திருப்பி விட்டுட்டாருங்க... மேயரோ, 'இந்தா, அந்தா'ன்னு ஒரு வருஷமா இழுத்தடிச்சுட்டு இருக்காருங்க... 'முதல்வர் கவனத்துக்கு போனா தான், மேயர் பணம் தருவாரா'ன்னு பத்திரிகையாளர்கள் புலம்பிட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''விளைநிலங்களை தரிசா மாத்திய அதிகாரி கதையை கேளுங்கோ ஓய்...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினார் குப்பண்ணா.
''அடப்பாவமே... யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''வேளாண் துறை சார்புல, தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற, மாவட்டம் தோறும் இலக்கு நிர்ணயம் பண்ணி திட்டங்களை செயல்படுத்தறா... ஆனா, வளமான தேனி மாவட்டத்துல இருக்கற வேளாண் அதிகாரி ஒருத்தர், இங்க வந்த ஆறே மாசத்துல, 250 ஏக்கர் விளை
நிலத்தை, தரிசு நிலம்னு ரியல் எஸ்டேட்காரங்களுக்கு சான்றிதழ்
தந்துட்டார் ஓய்...
''அவாளும், அதை வீட்டுமனைகளா மாத்தி வித்துண்டு இருக்கா... இதுக்காக, அவா தரப்புல இருந்து, அதிகாரிக்கு ஏக்கருக்கு, 30,000த்துல இருந்து, 50,000 ரூபாய் வரை, 'கவனிப்பு' நடந்திருக்கு ஓய்...
''இது போக, வீரபாண்டி மெயின் ரோட்டுல இருக்கற விதை சேமிப்பு நிலையத்துக்கு முன்னாடி இருந்த காலியிடத்தை, தனியார் வளைச்சு போடவும், அதிகாரிக்கு கவனிப்பு நடந்திருக்கு...
''தன் மேல எந்த நடவடிக்கையும் வந்துடாம காப்பாத்தணும்னு, மாவட்ட ஆளுங்கட்சி நிர்வாகி ஒருத்தருக்கு அதிகாரி கப்பம் கட்டிண்டு இருக்கார்னும் சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''வாங்க சங்கர்...'' என, நண்பரை வரவேற்ற அண்ணாச்சியே, ''விசாரணையை முடக்கிட்டாங்க வே...'' என்றார்.
''எந்த துறை விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''தமிழக மின்வாரியத்துல, விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டுல, பல வருஷத்துக்கு முன்னாடி சிலர் வேலைக்கு சேர்ந்தாவ... இதுல சிலர், தேசிய, மாநில அளவிலான போட்டிகள்ல கலந்துக்காம, விளையாட்டு வீரர்கள்னு போலி சான்றிதழ்கள் தந்து வேலைக்கு சேர்ந்துட்டாவ வே...
''இதனால, இந்த சான்றிதழ்களை எல்லாம், 'வெரிபை' பண்ணும்படி வாரியத்துல இருக்கிற விளையாட்டு பிரிவுக்கு, சில மாதங்களுக்கு முன்னாடி வாரியம்
உத்தரவு போட்டுச்சு...
''ஆனா, அந்த உத்தரவை செயல்படுத்தாம சிலர் தடுத்து நிறுத்திட்டாவ... அதுவும் இல்லாம, இது பத்தி உயர் அதிகாரிகள் கவனத்துக்கும் எடுத்துட்டு போகாம, நடவடிக்கையை முடக்கி வச்சுட்டாவ வே...'' என
முடித்தார், அண்ணாச்சி.அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.