Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்வு

சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்வு

சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்வு

சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்வு

UPDATED : செப் 01, 2025 10:34 AMADDED : செப் 01, 2025 05:22 AM


Google News
Latest Tamil News
சென்னை: சென்னை மாநகரில் இன்று முதல், டீ கடைகளில் டீ, காபி விலை உயர்த்தப்படுகிறது.

தலைநகர் சென்னையில், 1,000க்கும் அதிகமான டீ கடைகள் இயங்கி வருகின்றன.

பால் விலை மற்றும் காஸ் விலை உயர்வு உட்பட பல காரணங்களால், 2022ம் ஆண்டு, சென்னையில் 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட டீயின் விலை, 2 ரூபாய் உயர்த்தப்பட்டு, 12 ரூபாய்க்கும், 12 ரூபாய்க்கு விற்கப்பட்ட காபி விலை, 3 ரூபாய் உயர்த்தப்பட்டு, 15 ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் மூன்று ஆண்டுகளுக்கு பின், இன்று முதல் டீ, காபி விலையை உயர்த்த, டீ கடை உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். நேற்று வரை 12 ரூபாய்க்கு விற்கப்பட்ட டீ, இன்று முதல் 3 ரூபாய் அதிகரித்து, 15 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. காபி விலையும் 5 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 20 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. அதேபோல, ராகி மால்ட், பூஸ்ட், ஹார்லிக்ஸ் போன்றவற்றின் விலையும் அதிகரிக்கிறது. பால், லெமன் டீ விலையில் மாற்றம் இல்லை.

போண்டா, பஜ்ஜி, சமோசா விலையும் 3 ரூபாய் உயர்த்தப்பட்டு, 15 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளன. பார்சல் டீ, காபி விலையும், 10 முதல் 20 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. விலை உயர்வு குறித்து டீ கடை உரிமையாளர்கள் கூறுகையில், 'அதிகரித்து வரும் மின் கட்டணம், காஸ் விலை, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு காரணமாக, டீ, காபி விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது' என்றனர்.

தரத்திற்கு ஏற்ப விலை!

சென்னை பெருநகர டீ கடை உரிமையாளர்கள் சங்கத்தின் செயலர் சுந்தர் கூறியதாவது: டீ, காபி விற்பனை விலையை எங்கள் சங்கம் முடிவு செய்வது கிடையாது. அந்தந்த கடை உரிமையாளர்கள், தங்கள் பகுதி சூழலுக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயம் செய்து, வியாபாரம் செய்கின்றனர். இன்றும், சென்னையின் பல பகுதிகளில் 10 ரூபாய்க்கு டீ, காபி விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல இடத்திற்கேற்ப 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தற்போது, பல்வேறு பொருட்களின் விலை மற்றும் மின் கட்டண உயர்வு காரணமாக, பல டீ கடைகளில் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளனர். பொருட்களின் தரத்திற்கு ஏற்ப விலை உயர்வு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us