Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி

Latest Tamil News
கோவை: 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ஆகியோர் தப்பியோடியது ஏன்' என்று பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

கோவை வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி;

டாஸ்மாக் ஊழலை பற்றி நாம் பேசிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் அதில் அமலாக்கத்துறை தலையிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை வழங்கி உள்ளனர். அதில் சம்பந்தப்பட்ட துணை முதல்வர் நண்பர்களாக இருக்கக்கூடிய ரத்திஷ், ஆகாஷ் ஆகியோரை விசாரித்தால் தெரியும் என்று அமலாக்கத்துறை கூறி உள்ளது.

ஆனால் ஆகாஷூம், ரத்திஷூம் லண்டனுக்கு போய்விட்டதாக சொல்கின்றனர். சிலர் இங்கேயே இருப்பதாக சொல்கின்றனர். துணை முதல்வர் உதயநிதி, நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம், ஈடிக்கும்(அமலாக்கத்துறை) பயப்பட மாட்டோம் என்று சொல்லி இருக்கிறார்.

2011ம் ஆண்டு தேர்தல் நடக்கும்போது மாடியில் ஈடி ரெய்டு நடந்து கொண்டு இருந்தது. கீழே அதன் பேச்சுவார்த்தை ஓடிக் கொண்டு இருந்தது. ஆனால் அன்று மட்டும் ஈடிக்கு பயந்துதான் பேச்சு வார்த்தையை முடித்தார்களா என்று தெரியவில்லை.

அன்று முதல் இன்று வரை ஈ.டி. மீது பயம் உள்ளதால் தான் பயப்பட மாட்டோம் என்று உதயநிதி சொல்லி இருக்கிறார். அப்படி என்றால் ரத்தீஷ், ஆகாஷ் ஏன் பயந்து வெளிநாட்டுக்கு போக வேண்டிய அவசியம் என்ன? என்றார்.

அப்போது நிருபர் ஒருவர், 'ராஜ்ய சபா தேர்தல் தேதி அறிவித்துள்ளனர், அண்ணாமலைக்காக அ.தி.மு.க.,விடம் ராஜ்ய சபா சீட் கேட்பீர்களா' என்று கேள்வி எழுப்பினார்.அதற்கு நயினார் நாகேந்திரன் அளித்த பதில் வருமாறு:

அதாவது இந்த ராஜ்ய சபா, தேர்தல் கூட்டணி இதை பற்றி எல்லாம் தனிப்பட்ட முறையில் நான் எதுவும் சொல்ல முடியாது. இதை எல்லாம் எங்கள் தலைமை முடிவு செய்யும்.

எங்களிடம் இருப்பது 4 எம்.எல்.ஏ.,க்கள்தான். தலைமை என்ன சொல்கிறதோ அதன் படி கேட்போம். அதிமுகவுடன் நாங்கள் இப்போது கூட்டணியில் இருக்கிறோம். அதிமுக ஆதரவு என்றால் கண்டிப்பாக ஆதரவு கொடுப்போம் என்று கூறினார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது; நகைக்கடன் தொடர்பான ரிசர்வ் வங்கி அறிவிப்பு குறித்து மத்திய நிதி அமைச்சரிடம் பேசுவோம். எவ்வளவு இலகுவாக மாற்ற முடியுமோ அவ்வாறு செய்ய முயற்சிப்போம்.

திமுக ஆட்சியினால் மக்களுக்கு நிறைய சிரமங்கள் இருக்கிறது. சொத்து வரி உயர்வு 300 மடங்கு கூட்டியுள்ளனர். மின்சார கட்டணம் ஒவ்வொரு வருஷமும் 6 சதவீதம் கூட்டுகின்றனர். தொழிற்சாலைகள் நடத்த முடியாது.ஹோட்டல் நிர்வாகங்கள் நிச்சயமாக நடத்த முடியாது.

கட்ட பஞ்சாயத்து, கஞ்சா கடத்தல் எல்லாம் இந்த ஆட்சியில் அளவுக்கு அதிகமாக சென்று கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கை காவல் துறையால் பராமரிக்க முடியவில்லை.

இந்த ஆட்சி மக்களுக்கு விரோதமாக இருக்கிறது. ஆகவே எல்லா கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கையாக நாங்கள் வைக்கிறோம்.

கல்வி நிதி பிரச்னையில் மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். மும்மொழிக் கொள்கையில் எவ்வளவு பணம் செலவு செய்கிறோமோ அதை தான் இவர்கள்(தமிழக அரசு) கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆண்டுதோறும் கொடுக்கக்கூடிய தொகையை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

முதல்வர் டில்லி சென்று பிரதமரை சந்தித்த போது இதுகுறித்து விளக்கி இருப்பார் என்று நம்புகிறோம். அவர் என்ன பேசினார் என்பது எங்களுக்கு தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us