தொழில் வளர்ச்சிக்கு நம்பர் 1 தமிழகம்: மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் பாராட்டு
தொழில் வளர்ச்சிக்கு நம்பர் 1 தமிழகம்: மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் பாராட்டு
தொழில் வளர்ச்சிக்கு நம்பர் 1 தமிழகம்: மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் பாராட்டு
ADDED : ஜன 08, 2024 06:15 AM

சென்னை : ''பிரதமர் நரேந்திர மோடியின் இதயத்தில், தமிழகத்திற்கு தனி இடம் உள்ளது. வரும், 2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக வேண்டும் என்பதே பிரதமரின் இலக்கு,'' என, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று துவங்கிய, உலக முதலீட்டாளர் மாநாட்டில், அவர் பேசியதாவது:
தமிழகம் 2030ம் ஆண்டுக்குள், ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர், அதாவது, 83 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயித்து, அதை நோக்கி பயணித்து வருகிறது.
இதற்காக முதல்வர் ஸ்டாலின், தொழில் நிறுவனங்கள் மற்றும் தமிழக மக்களை பாராட்டுகிறேன். இலக்கை அடைய வாழ்த்துகள்.
இந்த இலக்கை எட்டினால், தமிழகத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும்.
சூரியனை ஆய்வு செய்வதற்காக, நம் நாடு அனுப்பிய, 'ஆதித்யா எல் - 1' விண்கலம், சூரிய ஒளி வட்டப் பாதையில், நேற்று முன்தினம் நிலை நிறுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் இயக்குனர் நிகர்ஷாஜி, தமிழகத்தின் தென்காசியை சேர்ந்தவர். இஸ்ரோ தலைவர் சோம்நாத் பின்னால் நாடே உள்ளது.
ஆதித்யா எல் - 1 விண்கலம், இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும்.
பிரதமர் நரேந்திர மோடியின் முன்னெடுப்பில், இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
நம்நாடு வரும், 2047ல், 100வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது.
அப்போது, நாட்டின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். பிரதமராக, 2014ல் நரேந்திரமோடி பொறுப்பேற்ற போது, 'மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால், இந்தியா வளர்ச்சி அடையும். நாட்டின் ஒவ்வொரு பகுதியும், இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்' என்றார்.
அதேபோல, 28 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்கள், நாட்டின் துாண்களாக உள்ளன. தமிழகம், 2030ம் ஆண்டுக்குள் 83 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரத்தை எட்ட, ஒவ்வொரு ஆண்டும் 18 சதவீதம் வளர்ச்சியை பெற இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
இலக்கை அடைய ஒவ்வொருவரும் பங்களிப்பு வழங்க வேண்டும். பிரதமர் மோடி சமீபத்தில், தமிழகத்தில், 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்தார்.
கடந்த, 10 ஆண்டுகளாக, மத்திய அரசு, தமிழக அரசுடன் இணைந்து , தொழில் மயமாக்கல், மக்கள் நலத்திட்டங்கள், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்கு பணியாற்றி வருகிறது.
மத்திய ஜவுளித்துறை சார்பில், ஏழு மெகா ஜவுளி பூங்காக்களை அறிவித்தோம். முதல் ஜவுளிப்பூங்கா தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் அமைய உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் இதயத்தில், தமிழகத்திற்கு எப்போதும் தனி இடம் உள்ளது.
புதிய பார்லிமென்ட் வளாகத்தில், தமிழகத்தின் பாரம்பரியமிக்க செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. ஆன்மிகத்துக்கு தமிழகம் மிகப்பெரிய பங்களிப்பை தந்துள்ளது. தமிழகத்துக்கும், இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இடையிலான பிணைப்பை போற்றும் வகையில், காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தமிழகம் உயர்ந்த இலக்குடன், அதி விரைவு பாதையில் பயணித்து வருகிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன், இந்தியாவின் பொருளாதாரம் வலுவிழந்த பொருளாதாரமாக இருந்தது. தற்போது உலகப் பொருளாதாரத்தில், ஐந்தாவது நாடாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. இளைஞர்கள் உட்பட அனைவரும், தொழில் துவங்குவதற்கான விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டு உள்ளன. பொருளாதார வளர்ச்சியில், மாநிலங்கள் இடையே போட்டி இருக்க வேண்டும்.
வரும், 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பதே பிரதமரின் இலக்கு. அதற்கு ஐந்து முக்கிய திட்டங்களை, கடந்த ஆண்டு சுதந்திர தின விழா உரையின் போது முன் வைத்தார்.
இந்தியாவை வளர்ந்த நாடாக்குவது, ஒவ்வொருவருடைய கனவாக இருக்க வேண்டும். ஒவ்வொன்றிலும் காலனி ஆதிக்க மனநிலை மாற வேண்டும். பாரம்பரியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒற்றுமையே இலக்காக இருக்க வேண்டும். இதன் அடிப்படையில், 140 கோடி மக்களும் இணைந்து செயல்பட வேண்டும்.
ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். பெண்களின் சக்தியை வலிமைப்படுத்தும் வகையில் செயல்படுவோம். திட்டமிட்டபடி, 2047க்குள் இந்தியா, 35 டிரில்லியன் பொருளாதாரத்தை அடையும். இதை தமிழகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உலகிலே தொழில் வளர்ச்சிக்கு மிகச்சிறந்த இடங்களில், தமிழகம் ஒன்றாக உள்ளது. பிரதமர் மோடி எடுத்த தொடர் நடவடிக்கையால், தொழில்துறை வலுவாக உள்ளது. மத்திய அரசின் முயற்சிகளுக்கு ஆதரவாக செயல்படும், தமிழக அரசுக்கு நன்றி. முதலீட்டாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம். நிறைந்த நீடித்த வளர்ச்சியை நாடு அடைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நாட்டுப்புற கலைஞர்களுக்கு பாராட்டு
முதலீட்டாளர்கள் மாநாட்டில், மத்திய வர்த்தகம், தொழில் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். மாநாட்டின் துவக்க விழா முடிந்ததும், முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.
அடுத்து, 10 நிமிடங்களில் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் வெளியே வந்தார். அவரிடம், தொழில் முனைவோர் சிலர் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். பின், அங்குள்ள இளைஞர்கள், மாணவர்கள் சூழ்ந்து, அவருடன், 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.
அதே பகுதியில், நாட்டுப்புற கலைஞர்கள் இருந்ததை பார்த்து, அமைச்சர் கையசைத்து காண்பித்தார். இதை பார்த்த நாட்டுப்புற கலைஞர்கள், உற்சாகமடைந்து சத்தம் போட்டனர். அவர்கள் அருகே சென்ற அமைச்சர் பியுஷ் கோயல், 'ஒண்டர்புல்' என ஆங்கிலத்தில் கூறி பாராட்டினார். அவர்களும் அமைச்சருடன், செல்பி எடுத்தனர்.