ரூ.37,907 கோடி வெள்ள நிவாரணம் கோரி அமித் ஷாவை சந்திக்க தமிழக எம்.பி.,க்கள் முடிவு
ரூ.37,907 கோடி வெள்ள நிவாரணம் கோரி அமித் ஷாவை சந்திக்க தமிழக எம்.பி.,க்கள் முடிவு
ரூ.37,907 கோடி வெள்ள நிவாரணம் கோரி அமித் ஷாவை சந்திக்க தமிழக எம்.பி.,க்கள் முடிவு
ADDED : ஜன 04, 2024 10:04 PM
சென்னை:'தமிழகத்திற்கு, 37,907 கோடி ரூபாய் வெள்ள நிவாரணத்தை விரைந்து வழங்க வலியுறுத்தி, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழுவினர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்கப்பட்டு உள்ளது' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர், 3, 4ம் தேதிகளில் வீசிய, 'மிக்ஜாம்' புயலால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
அதேபோல, டிசம்பர் 17 மற்றும், 18ம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால், துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில், மிக கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.
இந்த இரண்டு இயற்கை பேரிடர்களுக்கும் மத்திய அரசிடம், 37,907 கோடி ரூபாய் நிவாரணம் கோரப்பட்டுள்ளது. இதில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட மறுகட்டமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு, 19,692 கோடி ரூபாயும், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களின் மறுகட்டமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு, 18,214 கோடி ரூபாயும் அடக்கம்.
புயல் பாதிப்புகளை, மத்திய குழுவினர் பார்வையிட்டு சென்றுள்ளனர்.
ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் ஆய்வு செய்து, உரிய நிவாரண தொகையை வழங்குவதாக உறுதியளித்து உள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், துாத்துக்குடி மாவட்டத்திற்கு சென்று, வெள்ள பாதிப்பை ஆய்வு செய்தார்.
மத்திய குழு ஆய்வு மற்றும் மத்திய அமைச்சர்கள் பார்வையிட்ட பிறகும், மத்திய அரசிடம் இருந்து இதுவரை நிவாரண தொகை வழங்கப்படவில்லை.
இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் மற்ற மாநிலங்களில் ஏற்பட்ட போது, குறுகிய காலத்தில் மத்திய அரசு நிவாரண நிதியை, தேசிய பேரிடர் நிதியில் இருந்து வழங்கியுள்ளது.
பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் வெள்ள நிவாரண பணிகளுக்கு, தமிழக அரசு இதுவரை, 2,100 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது.
குறு, சிறு தொழில் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோருக்கு உதவும் வகையில், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான வாழ்வாதார மறுகட்டமைப்பு திட்டத்தையும், தமிழக அரசு அறிவித்து உள்ளது.
தமிழக அரசு கோரியுள்ள 37,907 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வலியுறுத்தி, தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.,க்களும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.