தொழில்புரிய உகந்த மாநிலம் தமிழகம்: ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி பாராட்டு
தொழில்புரிய உகந்த மாநிலம் தமிழகம்: ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி பாராட்டு
தொழில்புரிய உகந்த மாநிலம் தமிழகம்: ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி பாராட்டு
ADDED : ஜன 08, 2024 05:58 AM

சென்னை : ''நாட்டிலேயே தொழில் புரிய உகந்த மாநிலமாக, தமிழகம் திகழ்கிறது. இங்கு, 35,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது,'' என, ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், நேற்று துவங்கிய உலக முதலீட்டாளர் மாநாட்டில், 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்' தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசியதாவது:
இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்பது, என் தீவிர ஆசை. ஆனால், தவிர்க்க முடியாத சூழ்நிலையால் பங்கேற்கவில்லை. அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்.
செழுமையான கலாசாரம், அறிவுசார் பாரம்பரிய இடமாக, எப்போதும் தமிழகம் இருந்து வருகிறது. இந்த நவீன காலத்தில், தொழில், விவசாயம் மற்றும் சேவைகளில், தமிழகம் முன்னேற்றம் கண்டு ஒளிர்கிறது. இதன் வாயிலாக, அதன் செழுமை பன்மடங்கு மேம்பட்டுள்ளது.
முழக்கம்
இது, நாட்டின் அனைத்து முன்னேற்றத்துக்கும், செழுமைக்கும் பங்களிக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நாட்டிலேயே தொழில் புரிய உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
விரைவில் தமிழகம், 'டிரில்லியன் டாலர்' பொருளாதாரமாக மாறும் என, நம்புவதற்கான எல்லா காரணங்களும் உள்ளன. இதுவே, இந்த மாநாட்டின் பொருத்தமான முழக்கம்.
பல ஆண்டுகளாக தமிழகத்தின் வளர்ச்சியில், 'ரிலையன்ஸ்' குழுமம் பெருமையுடன் பங்கு கொண்டுள்ளது. மாநிலம் முழுதும், 25,000 கோடி முதலீட்டில், 1,300 சில்லரை விற்பனை கடைகள் திறந்துள்ளோம்.
ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ நிறுவனம், தமிழகத்தில், 35,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. டிஜிட்டல் புரட்சியின் பலன்களை, மாநிலத்தின் ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும், 3.5 கோடி சந்தாதாரர்களுக்கு கொண்டு சேர்த்துள்ளோம்.
உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில், ஜியோ நிறுவனம், '5ஜி' சேவையை விரிவுப்படுத்தியுள்ளது.
இது, செயற்கை நுண்ணறிவு மற்றும் நான்காவது தொழிற்புரட்சி தொழில்நுட்பங்களின் பலன்களையும் தமிழகம் பெற உதவுவதோடு, பொருளாதாரத்தையும் மேலும் அதிகரிக்கும்.
வாழ்த்து
கனடாவின், 'புரூக்பீல்ட் அசெட் மேனேஜ்மென்ட்' மற்றும் அமெரிக்காவின், 'டிஜிட்டல் ரியாலிட்டி'யுடன் இணைந்து, ரிலையன்ஸ் நிறுவனம் அதி நவீன, 'டேட்டா' மையத்தை அமைத்துள்ளது. அடுத்த வாரம், இது திறக்கப்படும்.
தமிழகத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜனில், ரிலையன்ஸ் புதிய முதலீடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
காலநிலை மாற்ற நெருக்கடியில் இருந்து பூமியை பாதுகாக்க தேவையான, நிலையான வளர்ச்சியை மேம்படுத்த, ரிலையன்ஸ் குழுமம் மாநில அரசுடன் நெருக்கமாக இருந்து பணிபுரியும்.
ரிலையன்ஸ் குழுமத்தின் எதிர்கால முயற்சிகளுக்கு, சாத்தியமான கொள்கைகளுடன் மாநில அரசு ஆதரவளிக்கும் என, நான் நம்புகிறேன். இந்த மாநாடு, பெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.