மாநில மின் தொடரமைப்பு நிறுவனம்; புதிதாக துவங்குகிறது தமிழக அரசு
மாநில மின் தொடரமைப்பு நிறுவனம்; புதிதாக துவங்குகிறது தமிழக அரசு
மாநில மின் தொடரமைப்பு நிறுவனம்; புதிதாக துவங்குகிறது தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் 200 கோடி ரூபாய்க்கு மேல் திட்டச்செலவு உடைய துணைமின் நிலையங்களை தனியார் நிறுவனங்களும் அமைத்து பராமரிக்கும் வகையில் ஒப்புதல் அளிக்க புதிதாக 'ஸ்டேட் டிரான்ஸ்மிஷன் யுடிலிட்டி' எனப்படும் மாநில மின் தொடரமைப்பு நிறுவனத்தை துவக்க அரசு முடிவு செய்துள்ளது.
பலவகை மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் பல்வேறு திறன் துணைமின் நிலையங்களுக்கு அதே திறனிலான மின் வழித்தடங்களில் எடுத்து வரப்படுகிறது.
துணைமின் நிலையங்களில் மின்சாரத்தின் உயரழுத்தம் குறைக்கப்பட்டு மின் சாதனங்கள் உதவியுடன் சீராக வினியோகம் செய்யப்படுகிறது.
தற்போது 110 கி.வோ., திறனுக்கு மேல் உள்ள துணைமின் நிலையங்களை மின் வாரியத்தின் மின் தொடரமைப்பு கழகமும் அதற்கு குறைவான துணைமின் நிலையங்களை மின் பகிர்மான கழகமும் அமைக்கின்றன.
அதன்படி துணைமின் நிலையம் அமைக்க 'டெண்டர்' கோரப்படுகிறது.
அதில் தேர்வாகும் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக அமைக்கப்படுகிறது. இதற்கான செலவை மின் வாரியம் வழங்குகிறது. துணைமின் நிலையம் அமைத்ததும் மின் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு விடும்.
மின் வாரியம் நிதி நெருக்கடியில் இருப்பதால் துணைமின் நிலையம் அமைக்க கடன் வாங்குகிறது. அந்த பணிகளை குறித்த காலத்திலும் முடிப்பதில்லை.
இதனால் செலவு அதிகரிக்கிறது. மத்திய மின் துறை அறிவுறுத்தலின்படி துணைமின் நிலையம் அமைப்பதில் புதிய விதியை அமல்படுத்தி தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டில் உத்தரவிட்டது.
இதன் வாயிலாக 200 கோடி ரூபாய்க்கு மேல் திட்டச்செலவு உடைய துணைமின் நிலையம், மின் வழித்தட பணிகளுக்கு கட்டண அடிப்படையிலானஏல முறை வாயிலாக 'டெண்டர்' கோரப்பட வேண்டும்.
அதில் மின் தொடரமைப்பு கழகம், தனியார் நிறுவனங்கள் என எந்த நிறுவனம் வேண்டுமானாலும்பங்கேற்கலாம்.
அதில் தேர்வாகும் நிறுவனத்துக்கு பணி ஆணை வழங்கப்படும். அந்நிறுவனம் தன் செலவில் துணைமின் நிலையம், மின் வழித்தடத்தை அமைத்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும். அதை பயன்படுத்துவதற்கு கட்டணத்தை மின் வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செலுத்தும். இந்த கட்டணம் எவ்வளவு என்பதை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம்நிர்ணயிக்கும்.
எனவே துணைமின் நிலையங்கள் அமைக்க டெண்டர் கோருவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு புதிதாக மாநில மின் தொடரமைப்பு நிறுவனம் விரைவில் துவக்கப்பட உள்ளது.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய மின் துறையின் கீழ் மத்திய மின் தொடரமைப்பு நிறுவனம் உள்ளது. இது மாநிலங்களுக்கு இடையே மின்சாரம் எடுத்துச் செல்வதற்கான மின் வழித்தடங்களைஅமைக்கிறது.
இதேபோல தமிழகத்திலும் 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவு உடைய துணைமின் நிலையங்களை அமைக்கும் பணிகளுக்கு புதிதாக மாநில மின் தொடரமைப்பு நிறுவனம் விரைவில் துவக்கப்பட உள்ளது. அதன் வாயிலாகவே இனி டெண்டர் கோருவது, ஒப்புதல் வழங்குவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கூறினார்.