Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தமிழக அரசு ஒன்றும் மேஸ்திரி அல்ல: அன்புமணி

தமிழக அரசு ஒன்றும் மேஸ்திரி அல்ல: அன்புமணி

தமிழக அரசு ஒன்றும் மேஸ்திரி அல்ல: அன்புமணி

தமிழக அரசு ஒன்றும் மேஸ்திரி அல்ல: அன்புமணி

ADDED : அக் 02, 2025 06:37 PM


Google News
Latest Tamil News
சென்னை:மத்திய அரசு நிதி கொடுத்தால் தான் மாணவர் சேர்க்கை நடத்துவோம் என்று கூறுவதற்கு தமிழக அரசு ஒன்றும் மேஸ்திரி அல்ல,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

கல்வி பெறும் உரிமைச்சட்டப்படியான மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியதைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கை நடைமுறை வரும் 6-ஆம் தேதி தொடங்கும் என்று தமிழக அரசின் கல்வித்துறை அறிவித்திருக்கிறது.

2009-ஆம் ஆண்டின் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத இடங்கள் ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்தப் பிரிவில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கான கட்டணத்தை மத்திய, மாநில அரசுகளே செலுத்திவிடும் என்பதால் அக்குழந்தைகளுக்கு இலவசக் கல்வி கிடைக்கிறது. இந்த இடங்களின் மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மே மாதம் மாணவர் சேர்க்கை நடைபெறும். மத்திய அரசு நிதி ஒதுக்காததைக் காரணம் காட்டி நடப்பாண்டில் இந்த மாணவர் சேர்க்கையை தமிழக அரசு நிறுத்தி வைத்திருந்ததால் பள்ளியில் சேர வசதியில்லாத பல்லாயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகள் பள்ளியில் சேரவில்லை.

இந்த நேரத்தில் மத்திய அரசு நிதி ஒதுக்கியதைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், மாணவர் சேர்க்கைக்காக அரசு அறிவித்திருக்கும் விதிமுறைகள் அபத்தமாக உள்ளன. தமிழக அரசின் விதிகள் அநீதியானவை.

இப்போது மாணவர் சேர்க்கை தொடங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு வகுத்திருக்கும் விதிகளின்படி இதுவரை பள்ளியில் சேராத மாணவர்களால் இனியும் சேர முடியாது; வேறு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களால் தங்களின் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாறவும் முடியாது. அப்படியானால், மாணவர் சேர்க்கையை இப்போது தொடங்கியும் பயனில்லை.

மத்திய அரசு நிதி கொடுத்தால் தான் மாணவர் சேர்க்கை நடத்துவோம் என்று கூறுவதற்கு தமிழக அரசு ஒன்றும் மேஸ்திரி அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. மக்களின் நலன்களை காக்கும் பொறுப்பு அதற்கு உள்ளது. அதை செய்யத் தவறியதால் பல்லாயிரம் மாணவர்கள் நடப்பாண்டில் பள்ளிகளில் சேர முடியவில்லை. அவர்களின் கல்விக்கு விளம்பர மாடல் அரசு என்ன செய்யப் போகிறது?

நடப்புக் கல்வியாண்டில் இதுவரை எந்தப் பள்ளிகளிலும் சேராத, கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி பயனடைய தகுதி கொள்ள குழந்தைகளை அவர்கள் விரும்பும் பள்ளிகளில் சேர அனுமதிக்க வேண்டும். அதேபோல், ஏற்கனவே பணம் கட்டி சேர்ந்த குழந்தைகளுக்கு கட்டணத்தைத் திருப்பி தருவதுடன், அவர்களின் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள அவர்கள் விரும்பும் பள்ளிகளில் சேர வகை செய்ய வேண்டும். அதற்கேற்ற வகையில் நடப்பாண்டிற்கான விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us