Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அயோத்தி சென்று வர தமிழக அரசு உதவி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

அயோத்தி சென்று வர தமிழக அரசு உதவி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

அயோத்தி சென்று வர தமிழக அரசு உதவி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

அயோத்தி சென்று வர தமிழக அரசு உதவி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

ADDED : ஜன 06, 2024 08:00 PM


Google News
Latest Tamil News
சென்னை:''அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகின்ற பக்தர்களிடமிருந்து கோரிக்கை வந்தால் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான உதவிகளை செய்ய அறநிலையத்துறை தயாராக உள்ளது,'' என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு, அரசு இசைக் கல்லுாரியை சேர்ந்த 108 மாணவ - மாணவியர், ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை பாசுரங்களை பாராயணம் செய்தனர்.

விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் பங்கேற்று பாராயணம் செய்தவர்களை பாராட்டினார். இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக துணைவேந்தர் சவுமியா, பேராசிரியர்களை கவுரவித்தார்.

பின், பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

அறநிலையத்துறையில் பல்வேறு புதிய ஆன்மிக நிகழ்வுகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறோம். மார்கழி மாதத்தை முன்னிட்டு ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை பாசுரங்களை பாராயணம் செய்கிற நிகழ்வு, கடந்தாண்டு முதல் பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் துவக்கப்பட்டது.

இதைபோல, கடந்தாண்டு வடபழனி ஆண்டவர் கோவிலிலும், இந்தாண்டு கந்தக் கோட்டத்திலும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் நடந்தது.

பாம்பன் குமரகுருபர சுவாமி கோவில் மயூர வாகன சேவன விழாவின், 100வது ஆண்டினை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. 1967ல் வெளியான பாம்பன் சுவாமிகளின் வரலாற்று நுால் மறுபதிப்பு செய்து வெளியிட உள்ளோம்.

அந்த நிகழ்ச்சியிலும் இசைக் கல்லுாரி மாணவ - மாணவியரின் சண்முக கவசம் மற்றும் குமாரஸ்த்தவம் ஆகியவற்றின் பாராயண நிகழ்வு நடக்க உள்ளது. சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுவதோடு, நாள் முழுவதும் அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.

வடலுாரில், 99.90 கோடி ரூபாயில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கான அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் முதல்வர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

ராமேசுவரத்திலிருந்து காசிக்கு ஆன்மிக சுற்றுப்பயணமாக கடந்தாண்டு, 200 நபர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தாண்டு, 300 நபர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதற்கான செலவை அரசு ஏற்கிறது.

அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல விரும்பும் பக்தர்களிடமிருந்து கோரிக்கை வந்தால், முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான உதவிகளை செய்ய அறநிலையத்துறை தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us