Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ஜி.எஸ்.டி., மறுசீரமைப்புக்கு ஆதரவும், எதிர்பார்ப்பும்

ஜி.எஸ்.டி., மறுசீரமைப்புக்கு ஆதரவும், எதிர்பார்ப்பும்

ஜி.எஸ்.டி., மறுசீரமைப்புக்கு ஆதரவும், எதிர்பார்ப்பும்

ஜி.எஸ்.டி., மறுசீரமைப்புக்கு ஆதரவும், எதிர்பார்ப்பும்

ADDED : செப் 05, 2025 01:17 AM


Google News
Latest Tamil News
சென்னை: டில்லியில் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி., அடுக்குகளை, நான்கில் இருந்து, 5 சதவீதம், 18 சதவீதம் என, இரண்டாக மறு சீரமைக்கப்பட்டு உள்ளது.

இதற்கு தொழில் துறையினர் மற்றும் வணிகர்களிடம் ஆதரவும், கூடுதல் சலுகைகள் அடங்கிய எதிர்பார்ப்பும் எழுந்து உள்ளது.

அதன் விபரம்:

'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க பொதுச்செயலர் வாசு தேவன்: ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு, மக்களுக்கு பலன் அளிக்கும். சிறு, குறு, நடுத்தர தொழில் துறையை பொறுத்தவரை, வாகன உதிரி பாகங்களுக்கு, 28 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி., 18 சதவீதமாக மாற்றப்பட்டு உள்ளது. இது, தொழில் நிறுவனங் களுக்கு பயன் அளிக்கும்.

அதேவேளையில், ஜி.எஸ்.டி., ஆவணங்களில் ஏற்படும் சிறு சிறு தவறுகளுக்கு, அதிக அபராதம் வசூலிப்பதை ரத்து செய்திருக்க வேண்டும். இதை செய்யாததால், மாநில அரசுகளின் வணிக வரித்துறை அதிகாரிகள், வாகனங்களை மடக்கி பல மடங்கு அபராதம் விதிக்கின்றனர்.

இது, சிறு, குறுந் தொழில் நிறுவனங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.

தமிழக உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் வேல்சங்கர், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம்: அனைத்து கார வகைகள், உலர் பழங்கள், நிலக்கடலைக்கு, ஜி.எஸ்.டி., வரி 5 சதவீதமாக மாற்றப்பட்டதை வரவேற்கிறோம். சிறுதானியம், மாவு, வெல்லம், கருப்பட்டிக்கு, 25 கிலோவுக்கு கீழ் வரி உண்டு என்பதை மாற்றி அமைக்க வேண்டும்.

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணை தலைவர் சக்திவேல்: கவுன்சில் மற்றும் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை சார்பில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின் வரி சீர்திருத்த நடவடிக்கையை வரவேற்கிறோம். இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தும்.

ஏற்றுமதி 'ரீபண்ட்' களை, ஏழு நாட்களுக்குள் விரைவாக வழங்குதல், 1,000 ரூபாய்க்கு குறைவான 'ரீபண்ட்' திரும்ப பெற அனுமதித்தல் போன்ற முடிவுகள், சரியான நேரத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் அளிப்பதாக உள்ளது. இதனால், ஏற்றுமதியாளர்களின் பணப்புழக்க நெருக்கடிகள் குறைந்து, வர்த்தக சங்கிலி மேலும் சீராகும்.

திருப்பூர் ஏற்றுமதி யாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன்: செயற்கை நுாலிழை, துணி ஆகியவற்றின் மீது, 12 சதவீதம் அளவுக்கு, ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டு இருந்தது.

இதனால், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி வளர்ச்சி சிரமமாக இருந்தது. தற்போது ஜி.எஸ்.டி., 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி பரவலாக அதிகரிக்கும். சர்வதேச சந்தையில் கூடுதல் ஏற்றுமதி ஆர்டர்களை ஈர்க்க, இது துணையாக இருக்கும்.

தென் மாநில பனியன் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஈஸ்வரன்: சாயக்கழிவுநீர் பொது சுத்திகரிப்பு மையத்தில், துணிகளுக்கு சாயமேற்றும் சேவை கட்டணத்துக்கான வரி, 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. ஜி.எஸ்.டி., வரி சீர்திருத்தம், குறு, சிறு, நடுத்தர ஆடை உற்பத்தியாளர்களின் மூலதன நிதியை மேம்படுத்தும்.

பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல்: காடா துணி பைகளுக்கு, 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்புக்கு இடையே, ஜவுளித் தொழில் துறை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.

இதற்கு மாற்று வழி முறையை தொழில் துறையினர் ஆலோசித்து வரும் நிலையில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி., வரி குறைப்பு அறிவிப்பு, மிகப்பெரும் சுமையை இறக்கி வைத்துள்ளது.

தென்னிந்திய அட்டைபெட்டி உற்பத்தியாளர் சங்கம், கோவை மண்டல தலைவர் சிவகுமார்: அட்டைப்பெட்டி உற்பத்திக்கு, 'கிராப்ட்' காகிதம் பிரதான மூலப்பொருளாக உள்ளது.

இதுவரை கிராப்ட் காகிதம் மற்றும் அட்டைப்பெட்டிக்கு, 12 சதவீதம் வரி இருந்தது. தற்போது, காகிதத்துக்கு வரியை குறைக்காமல், அட்டைப் பெட்டிக்கான ஜி.எஸ்.டி., மட்டும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது வேதனை அளிக்கிறது. இதை, ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிசீலனை செய்து, கிராப்ட் காகிதத்துக்கான வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us