Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ புதிய மின் இணைப்பு பெற கட்டணம் திடீர் உயர்வு

புதிய மின் இணைப்பு பெற கட்டணம் திடீர் உயர்வு

புதிய மின் இணைப்பு பெற கட்டணம் திடீர் உயர்வு

புதிய மின் இணைப்பு பெற கட்டணம் திடீர் உயர்வு

ADDED : ஜூலை 02, 2025 02:29 AM


Google News
Latest Tamil News
சென்னை,: புதிய மின் இணைப்பு பெறுவது, மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வது உட்பட, பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை, 3.16 சதவீதம் உயர்த்தி, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வீடுகளுக்கு ஒரு முனை மற்றும் மும்முனைப் பிரிவில், மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இரு பிரிவிலும், புதிய மின் இணைப்பு வழங்க, மீட்டர் வைப்பு தொகை, மின் பயன்பாடு வைப்பு தொகை, வளர்ச்சி கட்டணம், மின் இணைப்பு கட்டணம், பதிவு கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கிய, பல்வகை கட்டணத்தை, மின் வாரியம் வசூலிக்கிறது.

இது, ஒரு முறை செலுத்தக்கூடியது. மின் பயன்பாட்டு கட்டணம் மட்டுமின்றி, பல்வகை கட்டணங்களையும், 3.16 சதவீதம் உயர்த்தி, மின்சார ஒழுங்குமுறை ஆணையம், நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஒரு முனைப் பிரிவில் மின் இணைப்புக்கான கட்டணம், 1,070 ரூபாயில் இருந்து, 1,105 ரூபாயாகவும்; மீட்டர் வைப்பு தொகை, 800 ரூபாயில் இருந்து, 825 ரூபாயாகவும் உயர்ந்துள்ளன.

வளர்ச்சி கட்டணம், 3,000 ரூபாயில் இருந்து, 3,095 ரூபாயாகவும்; பதிவு கட்டணம், 215 ரூபாயில் இருந்து, 220 ரூபாயாகவும்; வைப்பு தொகை, 320 ரூபாயில் இருந்து, 330 ரூபாயாகவும் அதிகரித்துள்ளன.

இதேபோல், மும்முனைப் பிரிவு மற்றும் உயரழுத்த பிரிவில், புதிய மின் இணைப்பு பெறுவதற்கான, பல்வகை கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளன.

வளர்ச்சி கட்டணம் மட்டும், தரைக்கு அடியில் மின் வினியோகம் செய்யும் இடம் மற்றும் மின் கம்பம் வாயிலாக, மின் வினியோகம் செய்யும் இடத்தில், தனித்தனியே உள்ளன. இதுதவிர, தாழ்வழுத்த பிரிவில், வீடுகளில் தீயில் எரிந்த, சேதமடைந்த மீட்டரை மாற்றும் கட்டணம், 1,070 ரூபாயில் இருந்து, 1,105 ரூபாயாகவும்; மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணம், 645 ரூபாயில் இருந்து, 665 ரூபாயாகவும் அதிகரித்துள்ளன. இதேபோல், பல சேவைகளின் கட்டணங்கள் தாழ்வழுத்த, உயரழுந்த பிரிவுகளில் தனித்தனியே உயர்த்தப்பட்டு உள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us