மாநில வாரியாக விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம்
மாநில வாரியாக விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம்
மாநில வாரியாக விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம்
ADDED : ஜூன் 01, 2025 04:10 AM
மதுரை: 'நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையாக குவிண்டாலுக்கு ரூ.69 வீதம் மத்திய அரசு தற்போது உயர்த்தியுள்ளது. உற்பத்திச்செலவை கணக்கிட்டால் இத்தொகை தமிழக விவசாயிகளுக்கு பயனளிக்காது. மாநிலங்களின் உற்பத்திச் செலவை கணக்கிட்டு, மத்திய அரசு வேளாண் உற்பத்திப்பொருட்களுக்கு மாநிலங்கள் வாரியாக விலை நிர்ணயிக்க வேண்டும்,' என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசு புள்ளிவிபரங்களின்படி ஒரு ஏக்கர் நெல்லுக்கு ரூ.36 ஆயிரம் வீதம் உற்பத்திக்கு செலவிட்டால் சராசரியாக இரண்டு டன் நெல் கிடைக்கிறது. மத்திய அரசு 2024 --2025 ல் குவிண்டால் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 2300 நிர்ணயம் செய்தது. நடப்பாண்டில் (2025 -20-26) கிலோவுக்கு வெறும் 69 காசு மட்டுமே உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த விலையுடன் தமிழக அரசு குவிண்டாலுக்கு ரூ.105 கூடுதலாக வழங்குவதையும் சேர்த்தால் குவிண்டாலுக்கு ரூ.2474 மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கிறது.
இதில் நெல் கொள்முதல் மையங்களில் மூடைக்கு ரூ.50 கமிஷனும் பெறுவதால் நஷ்டத்தை சந்திப்பதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில் நெல் மகசூல் ஏக்கருக்கு 2 டன் கிடைப்பதால் விவசாயிகளுக்கு ரூ. 49ஆயிரத்து 480 வருமானம் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கான நெல் உற்பத்திச்செலவு ரூ. 36ஆயிரம் ஆகிறது. மத்திய அரசு இந்தியா முழுவதற்கும் நெல் உற்பத்திச்செலவாக குவிண்டாலுக்கு ரூ.1579 ஆக நிர்ணயம் செய்துள்ளது.
இந்த கணக்கில் எங்குமே விவசாயிகளுக்கான ஊதியம் கணக்கிடப்படுவது இல்லை. எம்.எஸ்.சாமிநாதன் ஆணைய பரிந்துரைப்படி உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
அதன்படி ஒரு ஏக்கருக்கான 2 டன் நெல்லை கணக்கிட்டால் ஒரு கிலோவுக்கான நியாயமான நெல் உற்பத்திச்செலவாக ரூ. 38.25 வீதம் மத்திய அரசு தமிழக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
தற்போது ரூ.23.69 மட்டுமே கிடைப்பதால் ஒவ்வொரு முறை நெல் சாகுபடி செய்யும் போதும் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.14.56 நஷ்டம் ஏற்படுகிறது. அதாவது நெல்லை விளைவித்த விவசாயிகளுக்கான கூலி வழங்கப்படுவதே இல்லை. நெல் கொள் முதல் மையத்தில் இடும் போது மூடைக்கு ரூ.50 வீதம் கமிஷனும் பெறுகின்றனர். இது இன்னமும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
மாநில வாரியாக உற்பத்திச்செலவை கணக்கிட்டு அதற்கேற்ப அந்தந்த மாநிலங்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும்.
தமிழக அரசும் குவிண்டாலுக்கு ரூ.800 முதல் ரூ.1000 வரை உயர்த்தி வழங்கினால் தமிழக விவசாயிகள் சொந்த நிலத்தில் வேலை செய்வதற்கான ஊதியமும் கிடைக்கும் என்றார்.