அக்டோபர் 14ல் சட்டசபை கூட்டம் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
அக்டோபர் 14ல் சட்டசபை கூட்டம் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
அக்டோபர் 14ல் சட்டசபை கூட்டம் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
ADDED : செப் 24, 2025 04:26 AM

சென்னை : “தமிழக சட்டசபை, அடுத்த மாதம் 14ம் தேதி கூடும். இக்கூட்டத்தில், கூடுதல் செலவுகளுக்கான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும்,” என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
தமிழக சட்ட சபையில், மார்ச் 14ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின், அனைத்து துறைகளுக்கும் மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
ஏப்., 29 முதல், சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சட்டசபையை கூட்ட வேண்டும் என்பது விதி. அதன் அடிப்படையில், அக்., 14ல் சட்டசபை மீண்டும் கூட உள்ளது.
இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டி:
அக்., 14ம் தேதி காலை 9:30 மணிக்கு, சட்டசபை கூட்டம் நடக்கும். அன்று, மறைந்த வால்பாறை எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி மறைவு மற்றும் முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கு, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
நடப்பு நிதியாண்டின் கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கைகள் அளிக்கப்பட்டு, சபையில் நிறைவேற்றப்படும். சட்டசபை கூட்டத்தை, எத்தனை நாட்கள் நடத்துவது என்பது, அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
இதற்காக, 14ம் தேதி சபை கூடுவதற்கு முன்பாக, அலுவல் ஆய்வு கூட்டம் நடத்தப்படும். நான், அரசியல் கட்சியில் இருந்துதான் சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டேன். எனவே, அரசியல் தான் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத் தொடரில், முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.