கேரளா கடலில் கப்பல் விபத்து: தமிழகத்தில் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவு
கேரளா கடலில் கப்பல் விபத்து: தமிழகத்தில் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவு
கேரளா கடலில் கப்பல் விபத்து: தமிழகத்தில் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவு
ADDED : மே 31, 2025 04:52 AM

சென்னை: கேரள மாநில கடற்கரையில், 'எல்சா - 3' கப்பல் சமீபத்தில் விபத்துக்குள்ளாகி, அதில் இருந்த எரிபொருள், பிளாஸ்டிக் துகள், ஆபத்தான பொருட்களை கொண்ட 'கன்டெய்னர்'கள் கடலில் விழுந்தன. அவை, கன்னியாகுமரி கடற்கரையிலும் கரை ஒதுங்கி வருகின்றன.
இதனால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின், நேற்று உயரதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
அதில், முதல்வர் கூறியுள்ளதாவது:
பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் கன்டெய்னர்கள், வானிலை சூழலுக்கு ஏற்ப நகரும் திசை, கரை ஒதுங்க கூடிய பகுதிகள் தொடர்ந்து கண்காணித்து, பிளாஸ்டிக் துகளை அகற்ற வேண்டும். பாதுகாப்பு தொடர்பாக மக்களும், மீனவர்களும் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளை கலெக்டர்கள் வழங்க வேண்டும்.
இந்நிகழ்வால், சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த குறுகிய மற்றும் நீண்டகால ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மீன்வள துறை வாயிலாக மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள் மீதான தாக்கத்தை கண்டறிய ஆய்வை துரிதப்படுத்த வேண்டும். பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்த சூழ்நிலையை தொடர்ந்து கவனமாக கண்காணிக்க வேண்டும்.
தற்போதைய நிலவரப்படி, எவ்வித ஆபத்தான பொருட்களும் தமிழக கடற்கரையில் ஒதுங்கவில்லை.
பொது மக்கள் மற்றும் மீனவர்கள், பிளாஸ்டிக் துகள், பெட்டகங்கள், சந்தேகத்திற்கு உரிய பொருட்கள் கடலிலோ அல்லது கடற்கரையிலோ கண்டறியப்பட்டால், உடனே மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறையினருக்கும் தெரிவிக்க வேண்டும்.
மக்களின் உயிர், வாழ்வாதாரத்தை பாதுகாக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.