அ.தி.மு.க., மூத்த தலைவர்கள் எங்களுடன் 2 முறை பேசியுள்ளார்கள்
அ.தி.மு.க., மூத்த தலைவர்கள் எங்களுடன் 2 முறை பேசியுள்ளார்கள்
அ.தி.மு.க., மூத்த தலைவர்கள் எங்களுடன் 2 முறை பேசியுள்ளார்கள்
ADDED : பிப் 24, 2024 08:41 PM
திருச்சி:திருச்சி விமான நிலையத்தில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக, அ.தி.மு.க.,வின் முன்னணி தலைவர்களுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. கும்பகோணத்தில் உயர்மட்டக் குழு கூட்டம் நடக்கிறது. அதில், கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். இதில், நானே முடிவெடுப்பதில்லை. அரசியல் நிலவரம், மக்களின் எண்ணம் ஆகியவற்றையும் சிந்தித்து சிறந்த முடிவு எடுக்க வேண்டி உள்ளது. எந்தவித தவறும் நடக்காமல், எடுத்த முடிவு வெற்றி முடிவாக இருக்க வேண்டும். தொகுதிப்பங்கீடு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 2026ல் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று பேசியிருக்கிறேன். அதனால், லோக்சபா தேர்தலில் கட்சியின் பங்களிப்பு பற்றி கலந்து ஆலோசித்த பின், அறிவிக்கப்படும்.
தேசிய நீரோட்டத்தில் கலப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என்று நிருபர் ஒருவர் கேட்டதற்கு,
தேசிய நீரோட்டத்தில் தான் எல்லோரும் இருக்கிறோம். நீங்கள் கேட்பது நன்றாக புரிகிறது. புரியாத அளவுக்கு அறிவு இல்லாமலா இருக்கிறோம். தேசிய நீரோட்டம் என்றால் என்னவென்று தெரியாமலா இருக்கிறோம். நதி நீரை பற்றியா பேசிக்கொண்டிருக்கிறோம். பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால், நாட்டின் மரியாதையும் மதிப்பும் கூடியிருக்கிறது.
தேர்தல் கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள், அவரவர் தொகுதி எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ளத் தான் நினைப்பார்கள். கட்சியின் தனித்துவம் போகாமல் வலியுறுத்தி, பாதுகாத்துக் கொள்ளும் வகையில், முடிவுகள் எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.