'காலனி' பெயர் நீக்கும் முதல்வரின் அறிவிப்பை கண்டுகொள்ளாத ஊரகத்துறை
'காலனி' பெயர் நீக்கும் முதல்வரின் அறிவிப்பை கண்டுகொள்ளாத ஊரகத்துறை
'காலனி' பெயர் நீக்கும் முதல்வரின் அறிவிப்பை கண்டுகொள்ளாத ஊரகத்துறை
ADDED : செப் 10, 2025 01:58 AM

சென்னை:முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை செயல்படுத்த அரசாணை வெளியிடப்படாததால், 'காலனி' என்ற சொல், அரசு பயன்பாட்டில் தொடர்கிறது.
தமிழகத்தில் காலனி என்ற சொல் ஊரகப்பகுதிகளில், குறிப்பிட்ட சமூகத்தினரை குறிப்பிட பயன்படுத்தப்பட்டு வருகிறது. நகரப்பகுதிகளில், குடியிருப்புகளுக்கு காலனி என்ற பெயர் இருந்தாலும், பல இடங்களில் குறிப்பிட்ட சமூக மக்கள் வசிக்கும் பகுதியை குறிப்பிடுவதாக உள்ளது.
எனவே, 'காலனி என்ற சொல், அரசின் ஆவணங்களில் இருந்து நீக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின், ஏப்ரல் மாதம் சட்டசபையில் அறிவித்தார். நகரப்பகுதிகளில், 1,132 இடங்களில், குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதியை, 'காலனி' என, குறிப்பிடுவது தெரிய வந்துள்ளது.
எனவே, அந்த இடங்களுக்கு, பூக்கள், மரங்கள், வரலாறு, நிலம் போன்றவற்றின் பெயர்கள் சூட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக அப்பகுதிகளில் வசிப்பவர்களின் ஒப்புதல் பெற்று, பெயர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால், ஊரகப்பகுதிகளில், அதுபோன்று எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், 'காலனி' என்ற பெயரை நீக்கும் அரசாணை வெளியிடப்படாததால், ஊரக வளர்ச்சி துறை ஆவணங்களில், அந்த சொல் தொடர்கிறது. ஊரக வளர்ச்சி துறையால், பல்வேறு பணிகளை மேற்கொள்ள, 'டெண்டர்' கோரப்பட்டு உள்ளது.
அதில், பெரும்பாலான இடங்களில், 'காலனி' என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் அறிவிப்புக்கு, அரசாணை வெளியிடாததால், அதை செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியாத நிலை உள்ளது.