நம்மாழ்வார் விருதுக்கு ரூ.100 கட்டணம்; அரசு வசூலால் விவசாயிகள் அதிர்ச்சி
நம்மாழ்வார் விருதுக்கு ரூ.100 கட்டணம்; அரசு வசூலால் விவசாயிகள் அதிர்ச்சி
நம்மாழ்வார் விருதுக்கு ரூ.100 கட்டணம்; அரசு வசூலால் விவசாயிகள் அதிர்ச்சி
ADDED : செப் 09, 2025 06:25 AM

சென்னை; 'நம்மாழ்வார் இயற்கை விவசாயி விருதுக்கு விண்ணப்பிக்க, 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்' என, அரசு அறிவித்திருப்பது, விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்கப்படுத்தவும், மற்ற விவசாயிகளை, இயற்கை விவசாயத்தில் ஈடுபட வைக்கவும், சிறந்த இயற்கை விவசாயிகளுக்கு, நம்மாழ்வார் விருது வழங்கும் திட்டத்தை, அரசு செயல்படுத்தி வருகிறது. நடப்பாண்டு மூன்று விவசாயிகளுக்கு, பாராட்டு பத்திரத்துடன், தலா 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்பதாரர் பதிவு, வேளாண் துறையில், 'அக்ரிஸ் நெட்' இணையதளம் வாயிலாக நடந்து வருகிறது. 'ஆன்லைனில், 100 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்' என, அரசு அறிவித்துள்ளது; இது விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, திருவள்ளூர் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் ஜெ.ஆஞ்சநேயலு கூறியதாவது:
இயற்கை விவசாயிகளுக்கான, நம்மாழ்வார் விருது குறித்த அறிவிப்பு, மாவட்ட கலெக்டர்கள் வாயிலாக வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பத்தை இணையதளம் வாயிலாக, 15ம் தேதிக்குள், 100 ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவேற்றம் செய்ய வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விருதுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்காமல், விவசாயிகளை கவுரவித்து இருக்க வேண்டும்.
அதை தவிர்த்து, விண்ணப்பிக்க 100 ரூபாய் கட்டணம் கேட்பது, இயற்கை விவசாயிகளை இழிவுப்படுத்துவது போல உள்ளது. ரொக்கப் பரிசு செலவு தொகையான, 6 லட்சம் ரூபாயை கூட வழங்க முடியாமல், வசூல் செய்வதற்கு நுாதன கட்டண வசூல் நடவடிக்கையை, அரசு மேற்கொண்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எது எதற்கோ பணத்தை வாரி வழங்கும் அரசு, விவசாயிகளுக்கு விருது வழங்க, கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.