கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அதிகம்: ஐகோர்ட் கருத்து
கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அதிகம்: ஐகோர்ட் கருத்து
கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அதிகம்: ஐகோர்ட் கருத்து
ADDED : ஜூலை 05, 2024 11:59 AM

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அதிகம்; இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் 18ம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதில் 64 பேர் உயிரிழந்துள்ளனர்; சிலர் சிகிச்சையில் உள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து, அதற்கான காசோலை உடனடியாக வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு கூடுதல் நிவாரணங்களையும் தமிழக அரசு தரப்பில் முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கியதை எதிர்த்து முகமது கோஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இதனை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு இன்று (ஜூலை 5) விசாரித்தது. அப்போது, 'கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு என்பது அதிகம். இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும்?' என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இழப்பீடு தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை தெரிவிக்க உத்தரவிட்டனர்.