ADDED : ஜூன் 30, 2025 03:00 AM
ஏலகிரி: ''ஏலகிரியில் விரைவில், 'ரோப் கார்' விடப்படும்,'' என, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று கோடை விழாவை துவக்கி வைத்தனர்.
அமைச்சர் ராஜேந்திரன் கூறுகையில், ''இங்குள்ள இயற்கை பூங்கா, படகு குழாம் சீர்படுத்தப்படும். தனியார் பங்களிப்புடன், ஏலகிரி மலையில், ரோப் கார் விடும் பணி விரைவில் துவக்கப்படும்,'' என்றார்.
ஏலகிரி கோடை விழா, 2016க்கப் பின் தற்போது தான் நடக்கிறது. ஆனால், இரு நாட்களுக்கு முன் தான் அறிவிப்பு வெளியானது. இதனால், நேற்று நடந்த கோடை விழாவுக்கு மக்கள், சுற்றுலாப்பயணியர் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் வெறிச்சோடியது.