ஓய்வு போலீஸ் அதிகாரிகள் பா.ஜ.,வில் இணைய ஆர்வம்
ஓய்வு போலீஸ் அதிகாரிகள் பா.ஜ.,வில் இணைய ஆர்வம்
ஓய்வு போலீஸ் அதிகாரிகள் பா.ஜ.,வில் இணைய ஆர்வம்
ADDED : ஜன 11, 2024 02:02 AM
சேலம்:தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை நடத்தும் என் மண் என் மக்கள் எனும் பாத யாத்திரைக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது.
சேலத்தில் கடந்த வாரத்தில் நடந்த பாதயாத்திரையில் இதுவரை பார்த்திராத வகையில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
அப்போது ஓய்வு பெற்ற எஸ்.பி. மோகன் தலைமையில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அவர்களது குடும்பத்தினர் என 131 பேர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.வில் இணைந்தனர்.
ஓய்வு எஸ்.பி. மோகனின் சகோதரர் குடும்பத்தினர் பா.ம.க.வில் ஒன்றிய நிர்வாகிகளாகவும் உறவினர்கள் அ.தி.மு.க.வில் நிர்வாகிகளாகவும் இருந்த போதும் இவர் பா.ஜ.வில் இணைந்தது பா.ம.க. - அ.தி.மு.க. வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஓய்வு பெற்ற எஸ்.பி. மோகன் கூறியதாவது:
போலீசில் சேர்ந்து 34 ஆண்டு நேர்மையாக பணிபுரிந்துள்ளேன். இரண்டு முறை உயர்நீதிமன்ற நீதிபதிகளே என் நேர்மையை தீர்ப்பில் பாராட்டியுள்ளனர்.
2010ல் ஓய்வு பெற்ற பின் 'பாரத் ரிட்டையர்டு போலீஸ் ஆபிசர்ஸ் அசோசியேன்' எனும் அமைப்பை உருவாக்கி தலைவராக உள்ளேன். இதில் 284 ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் உள்ளனர்.பல கட்சிகளிலிருந்து அழைப்பு வந்த போதும் அரசியலில் இறங்காமல் இருந்தேன். இன்று உலக நாடுகள் அனைத்தும் மதிக்கத்தக்க தலைவராக மோடி திகழ்கிறார். உண்மையும் நேர்மையும் இல்லாமல் அது நடக்காது.
வேறு யாராக இருந்திருந்தாலும் சீனா பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் இந்தியாவை அடகு வைத்திருப்பர். ஊழலற்ற நேர்மைக்கு துணை போக வேண்டும் என்பதற்காகவே தமிழக பா.ஜ.வில் இணைந்தேன். எந்த பொறுப்புகளையும் எதிர்பார்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.