Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ பதிவு முடிந்த பத்திரங்களை முடக்கும் சார் - பதிவாளர்கள்

பதிவு முடிந்த பத்திரங்களை முடக்கும் சார் - பதிவாளர்கள்

பதிவு முடிந்த பத்திரங்களை முடக்கும் சார் - பதிவாளர்கள்

பதிவு முடிந்த பத்திரங்களை முடக்கும் சார் - பதிவாளர்கள்

ADDED : செப் 26, 2025 03:19 AM


Google News
Latest Tamil News
சென்னை: பதிவு முடிந்த பத்திரங்களை, விதிகளுக்கு மாறாக சார் - பதிவாளர்கள் முடக்கி வைப்பதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில், 587 சார் - பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்கள் பதிவாகின்றன. இந்த பத்திரங்கள் பதிவு முடிந்ததும், 'ஸ்கேன்' செய்து, சில மணி நேரத்துக்குள் திருப்பி கொடுக்க வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக, இதுவே நடைமுறையாக உள்ளது. குறிப்பாக, பதிவு முடிந்ததும், சொத்து வாங்கியவரிடம் பத்திரத்தை கொடுத்து, அவரிடம் ஒப்புகை பெற்று, அதை குறிப்பேட்டில் சேர்க்க வேண்டும்.

இதில் கட்டட கள ஆய்வு அவசியமாக உள்ள நிகழ்வுகளில், ஒரு வாரம் வரை பத்திரத்தை திருப்பி கொடுக்க தாமதம் ஆகும். மற்ற பத்திரங்களை பொறுத்தவரை, அதை இருப்பு வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

பதிவு முடிந்த பத்திரங்கள் திரும்ப கொடுக்கப்பட்ட விபரங்கள் தொடர்பாக, வாராந்திர மற்றும் மாதாந்திர அறிக்கையை, பதிவுத்துறை தலைவருக்கு அனுப்ப வேண்டும். இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தும், சில இடங்களில் பதிவு முடிந்த பத்திரங்களை, சார் - பதிவாளர்கள் முடக்குவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:

வீடு உள்ள சொத்துபத்திரங்களை பதிவு செய்தால், அதை திருப்பி கொடுப்பது போன்று ஒப்புகை பெறும் சார் - பதிவாளர்கள், முதலில் ஓரிரு நாளில் வாங்கிக் கொள்ளுமாறு சொல்கின்றனர்.

அதன்படி சென்றால், பத்திரத்தை தராமல் மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கின்றனர்.

இப்படியே, 15 நாட்கள் கடந்த நிலையில், வாக்குவாதம் செய்தால், 'உங்கள் பத்திரத்தின் கட்டட மதிப்பில் வேறுபாடு உள்ளது. நீங்கள் கூடுதலாக, 61,000 ரூபாய் கட்ட வேண்டும்' என்று சார் - பதிவாளர்கள் சொல்கின்றனர். அதற்கான, 'நோட்டீஸ்' தருமாறு கேட்டால், அதற்கும் ஓரிரு நாட்கள் கழித்து வரச் சொல்கின்றனர்.

அப்போது, ஆவண எழுத்தர் வாயிலாக பேரம் பேசுகின்றனர். இதற்கு சம்மதிக்காவிட்டால், பத்திரம் கிடப்பில் போடப்படும்.

இவ்வாறு அவர்கள்கூறினர்.

இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பதிவு முடிந்த நிலையில் பத்திரங்களை இருப்பு வைக்கக்கூடாது என, சார் - பதிவாளர்களுக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி வருகிறோம். இருப்பினும், சில சார் - பதிவாளர்கள் இப்படி புதிய வழியில் பத்திரங்களை முடக்குவதாக புகார் வந்துள்ளது.

பதிவுத்துறை தலைவர் கவனத்துக்கு கொண்டு சென்று, சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us