ஜி.கே.மணியை சந்தித்து ராமதாஸ் நலம் விசாரிப்பு
ஜி.கே.மணியை சந்தித்து ராமதாஸ் நலம் விசாரிப்பு
ஜி.கே.மணியை சந்தித்து ராமதாஸ் நலம் விசாரிப்பு
ADDED : ஜூன் 21, 2025 02:11 AM
சென்னை : சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பா.ம.க., கவுரவத் தலைவர் ஜி.கே.மணியை, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.
பா.ம.க.,வில் அப்பா ராமதாஸ், மகன் அன்புமணி இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இருவரையும் சமாதானப்படுத்த பலரும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் அன்புமணி தலைமையில், சேலம், தர்மபுரி மாவட்ட பா.ம.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்பதை தவிர்க்க, அந்த மாவட்டங்களை சேர்ந்த பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் அருள், ஜி.கே.மணி ஆகியோர், சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சேலம், தர்மபுரியில் பொதுக்குழு கூட்டம் முடிந்ததும், இருவரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதாகக் கூறப்பட்டது. சென்னை, ஓமந்துாரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ., அருள் மட்டுமே டிஸ்சார்ஜ் ஆன நிலையில், வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் ஜி.கே.மணி தொடர் சிகிச்சையில் உள்ளார்.
இதற்கிடையில், ராமதாஸ் மூத்த மகள் காந்திமதியின் கணவர் பரசுராமனும், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதையடுத்து, அவரை சந்தித்து உடல்நலம் விசாரிப்பதற்காக, நேற்று முன்தினம் ராமதாஸ் சென்னை வந்தார்.
நேற்று காலை, வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற ராமதாஸ், அங்கு சிகிச்சை பெறும் ஜி.கே.மணியை சந்தத்து, நலம் விசாரித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் நேற்று, ஜி.கே.மணியை சந்தித்து நலம் விசாரித்தார்.


