நடிகர் ராஜேஷ் குறித்து ரஜினி உருக்கம்
நடிகர் ராஜேஷ் குறித்து ரஜினி உருக்கம்
நடிகர் ராஜேஷ் குறித்து ரஜினி உருக்கம்
ADDED : ஜூன் 01, 2025 05:43 AM

சென்னை:பிரபல நடிகர் ராஜேஷ் உடல்நலக் குறைவால், மே 29ம் தேதி காலமானார். சென்னை ராமாபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜேஷ் உடலுக்கு, நடிகர் ரஜினி நேற்று அஞ்சலி செலுத்தினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
ராஜேஷ் மிகவும் எளிமையானவர். அவருக்கு நண்பர்கள் நிறைய பேர் உள்ளனர். முதல்வர் முதல் இளையராஜா வரை பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர் என்றால், அவர் அப்படி வாழ்ந்துள்ளார். அவருக்கு தெரியாத விஷயங்களே கிடையாது.
நல்ல மனிதராக வாழ்ந்துள்ளார். என்னை அடிக்கடி சந்தித்து, 'நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும்' எனக்கூறி, அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்; எதை சாப்பிட வேண்டும் என்று கூறுவார். நல்ல மனிதர்; அவரை இழந்தது பேரிழப்பு.
இவ்வாறு ரஜினி கூறினார்.
இதற்கிடையே, ராஜேஷின் இறுதிச்சடங்கு, நேற்று மாலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் நடந்தது. திரையுலகினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.