சேலம், மதுரையில் புறவழிச்சாலை அமைக்க தயாராகிறது திட்ட அறிக்கை: அமைச்சர் வேலு
சேலம், மதுரையில் புறவழிச்சாலை அமைக்க தயாராகிறது திட்ட அறிக்கை: அமைச்சர் வேலு
சேலம், மதுரையில் புறவழிச்சாலை அமைக்க தயாராகிறது திட்ட அறிக்கை: அமைச்சர் வேலு
ADDED : மார் 25, 2025 12:32 AM

சென்னை: “சேலம் மற்றும் மதுரையில் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என, அமைச்சர் வேலு தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
பா.ம.க., - அருள்: சேலம் மாநகருக்கு சுற்றுச்சாலை அமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே, வெளிவட்ட சாலை அவசியம் தேவை.
அமைச்சர் வேலு: சேலம் விமான நிலையம் பகுதியில் துவங்கி, மல்லுாரில் இணையும் வகையில், 45 கி.மீ., நீளத்திற்கு புறவழிச்சாலை அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.
கமலாபுரம் பகுதியில் துவங்கி, சேலம் - உளுந்துார்பேட்டை சாலையில் மின்னலம்பாளையத்தில் இணையும் வகையில், வெளிவட்ட சாலை அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதை விரைவாக முடிக்க, மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
அருள்: நன்றி. கே.ஆர்.தோப்பில் இருந்து முத்துநாயக்கன்பட்டி வரை; அழகுசமுத்திரத்தில் இருந்து, முத்துநாயக்கன்பட்டி வரை; பெங்களூரு பைாஸ் சாலையில், அரசு பொறியியல் கல்லுாரியில் இருந்து முத்துநாயக்கன்பட்டி வரை சாலை குறுகலாக உள்ளது. இவற்றை விரிவுப்படுத்த வேண்டும்.
பள்ளப்பட்டி - சூரமங்கலம் சாலையில், குழாய் பாலம் உள்ளது. அதை பெட்டி பாலமாக மாற்றித் தர வேண்டும். சேலம், ஐந்து ரோடில் இருந்து மூன்று ரோடு வரை, மழைநீர் வடிகால்வாய் அமைத்துத் தர வேண்டும்.
அமைச்சர் வேலு: மழைநீர் வடிகால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற கோரிக்கைகள் நிதி நிலைக்கேற்ப பரிசீலிக்கப்படும்.
தி.மு.க., - பிச்சாண்டி: கீழ்பென்னாத்துார் தொகுதியில், வேட்டவலத்திற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி எப்போது துவங்கும்? திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து செங்கம் சாலையை இணைக்கும் பைபாஸ் சாலை, இந்த ஆண்டு அமைக்கப்படுமா?
சென்னையில் வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டதுபோல், மதுரை, திருச்சி, சேலம் போன்ற பகுதிகளுக்கு, வெளிவட்ட சாலை அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் வேலு: வேட்டவலத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு, நிலம் எடுக்கும் பணி நடக்கிறது. அப்பணி முடிந்ததும் சாலை அமைக்கப்படும். திருவண்ணாமலையில் முக்கால்வாசி ரவுண்டானா சாலை அமைக்கப்பட்டுள்ளது. வேலுாரில் இருந்து செங்கம் சாலையை இணைத்து விட்டால், பணி நிறைவடைந்து விடும். இதற்கு நிலம் எடுக்க, மாநில அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளை இணைப்பதால், மாநில அரசு நிதி ஒதுக்க வேண்டியதில்லை என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது. தற்போது, மத்திய அரசு நிதி பெற்று, நிலம் எடுப்பு பணி நடந்து வருகிறது.
அ.தி.மு.க., - பன்னீர்செல்வம்: தேனி நகரில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ரயில்வே பாலம் கட்ட, கடந்த ஆட்சியில் 'டெண்டர்' விடப்பட்டது. பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. விரைவாக பணியை முடிக்க வேண்டும்.
அமைச்சர் வேலு: மத்திய அரசிடம் வலியுறுத்தி, பணியை விரைவாக முடிக்க அரசு முயற்சிக்கும்.
கொ.ம.தே.க., - ஈஸ்வரன்: திருச்செங்கோடு நகரில், புறவழிச்சாலை தேவை. இப்பணி துவக்கப்படுமா?
அமைச்சர் வேலு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு, மாற்று சாலைக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. புறவழிச்சாலை அமைக்க, திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.
அ.தி.மு.க., - ஆனந்தன்: பல்லடம் நகருக்கு புறவழிச்சாலை, வெளிவட்ட சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எப்போது பணி துவக்கப்படும்?
அமைச்சர் வேலு: திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படுகிறது.
தி.மு.க., - தளபதி: மதுரையில் வெளிவட்ட சாலை அமைக்க வேண்டும்.
அமைச்சர் வேலு: மதுரை திட்டம்பட்டியில் இருந்து திருமங்கலம் வரை, புறவழிச்சாலை அமைக்க ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆண்டு பணியை துவக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.தி.மு.க., - கடம்பூர் ராஜு: கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு, புதிய நெடுஞ்சாலை கோட்டம் அமைக்க வேண்டும்.
அமைச்சர் வேலு: முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.