மே மாத சம்பளம் தரக்கோரி பேராசிரியர்கள் போராட்டம்
மே மாத சம்பளம் தரக்கோரி பேராசிரியர்கள் போராட்டம்
மே மாத சம்பளம் தரக்கோரி பேராசிரியர்கள் போராட்டம்

சென்னை: மே மாத சம்பளம் வழங்க வலியுறுத்தி, சென்னை பல்கலை ஆசிரியர்கள், அலுவலர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு, பல்கலை சமஸ்கிருதத் துறையின் தலைவர் முருகன் தலைமை வகித்தார்.
போராட்டம் குறித்து அவர் கூறியதாவது:
சென்னை பல்கலையில், 180 பேராசிரியர்கள்; 175 தற்காலிக விரிவுரையாளர்கள் உட்பட 2,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு மாதம், 16 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. சில ஆண்டுகளாக, தாமதமாக ஊதியம் வழங்குவது, வழங்காமல் நிலுவையில் வைப்பது என, பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன.

மேலும், சென்னை பல்கலைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை.
அதனால், பல்கலையில் பேராசிரியர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகளும் கிடைக்கவில்லை.
முதல்வர் இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓரிரு நாட்களுக்குள் ஊதியம் வழங்கவில்லை எனில், அடுத்தக்கட்டமாக சாலையில் இறங்கி போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.