Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தொகுதிகள் சீரமைப்பை 25 ஆண்டுக்கு... தள்ளி வையுங்கள்

தொகுதிகள் சீரமைப்பை 25 ஆண்டுக்கு... தள்ளி வையுங்கள்

தொகுதிகள் சீரமைப்பை 25 ஆண்டுக்கு... தள்ளி வையுங்கள்

தொகுதிகள் சீரமைப்பை 25 ஆண்டுக்கு... தள்ளி வையுங்கள்

UPDATED : மார் 23, 2025 12:06 AMADDED : மார் 22, 2025 11:21 PM


Google News
Latest Tamil News
சென்னை : 'லோக்சபா தொகுதிகள் மறுசீரமைப்பை, அடுத்த 25 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க வேண்டும்' என, சென்னையில் நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில், 23 கட்சிகள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்கள் தொகை அடிப்படையில், லோக்சபா தொகுதிகளை மறுசீரமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் தி.மு.க., தலைமை, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை ஒருங்கிணைத்து, கூட்டு நடவடிக்கை குழு அமைத்துள்ளது.

இந்தக் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது.

கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் செயல் தலைவர் ராமாராவ், பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சஞ்சய்குமார் தாஸ் பர்மா, அமர் பட்நாயக், பஞ்சாப் மாநிலம் சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் சர்தார் பல்வீந்தர் சிங் உள்ளிட்ட, 23 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

 பல்வேறு மாநிலங்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளாமல், செய்யப்படவுள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லாமை, தெளிவின்மை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறோம்.

வளர்ச்சியடைந்த மாநிலங்களின் அரசியல், பொருளாதார எதிர்காலத்தை பாதுகாக்க, இந்த கூட்டு நடவடிக்கை குழுவை ஒருங்கிணைத்தமைக்காக, முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறோம்

 ஜனநாயக முறையையும், பண்பையும் மேம்படுத்தும் நோக்கிலேயே, தொகுதி மறுசீரமைப்பை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

அந்நடவடிக்கையை வெளிப்படையாகவும், தொடர்புடைய அனைத்து மாநிலங்கள், மாநில அரசுகள், அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து, உரையாடல் மேற்கொண்டு, அவர்கள் வழங்கும் கருத்துகளின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்

 மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை பாதுகாப்பதும், ஊக்குவிப்பதும், தேசிய மக்கள் தொகையை நிலைப்படுத்துவதும் தான், 42, 84, 87வது அரசியலமைப்பு திருத்தங்களின் நோக்கம்.

இந்த இலக்கு இன்னும் அடையப்படவில்லை என்ற உண்மையை கருத்தில் கொண்டு, 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான லோக்சபா தொகுதிகளின் மறுசீரமைப்பு தள்ளிவைப்பு, மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்

 மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை திறம்பட செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது. இதற்காக, தேவையான அரசியலமைப்பு திருத்தங்களை, மத்திய அரசு செய்ய வேண்டும்

 இவற்றுக்கு முரணாக, மத்திய அரசு மேற்கொள்ளும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையின் அனைத்து முயற்சிகளையும் எதிர்த்து, பார்லிமென்ட் நடவடிக்கைகளை, மாநிலங்களின் எம்.பி.,க்கள் குழு ஒருங்கிணைக்கும்.

எம்.பி.,க்கள் ஒருங்கிணைப்புக் குழு, நடந்து வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரின்போது, மேற்குறிப்பிட்ட அம்சங்களின் அடிப்படையில், பிரதமருக்கு தங்களது கருத்தைத் தெரிவிக்கும்

 இக்கூட்டத்தில் பங்கேற்ற மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், இப்பிரச்னையில் அந்தந்த மாநில சட்டசபைகளில் தீர்மானங்களை நிறைவேற்றி, அவற்றை மத்திய அரசுக்கு தெரிவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

 ஒருங்கிணைந்த பொதுக்கருத்தை உருவாக்க, கடந்த கால தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் வரலாறும், அந்நடவடிக்கைகளின் விளைவுகளும் குறித்த தகவல்களை, அந்தந்த மாநில மக்களிடையே பரப்புவதற்கு கூட்டு நடவடிக்கைக் குழு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us