சிறை தண்டனையை எதிர்த்து பொன்முடி மேல்முறையீடு
சிறை தண்டனையை எதிர்த்து பொன்முடி மேல்முறையீடு
சிறை தண்டனையை எதிர்த்து பொன்முடி மேல்முறையீடு
ADDED : ஜன 03, 2024 11:00 PM
புதுடில்லி:சொத்துக்குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக உயர்கல்வி துறை அமைச்சராக பதவி வகித்து வந்த பொன்முடி, 2006 - 11 காலகட்டத்தில், தி.மு.க., ஆட்சியின்போது உயர்கல்வி மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது, வருமானத்துக்கு அதிகமாக, 1.72 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக, 2011-ல் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விசாரித்து, பொன்முடி, விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள், அரசு தரப்பில் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இருவரையும், 2016-ல் விடுதலை செய்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை, 2017-ம் ஆண்டு மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில், பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும், தலா, 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி தரப்பில், நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.