Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் தற்கொலை; புள்ளி விவரம் தந்த ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் தற்கொலை; புள்ளி விவரம் தந்த ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் தற்கொலை; புள்ளி விவரம் தந்த ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் தற்கொலை; புள்ளி விவரம் தந்த ராமதாஸ்

Latest Tamil News
சென்னை; ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை நிகழ்ந்த மொத்த உயிரிழப்பு 89 என்று உயர்ந்துள்ள நிலையில், தடுத்து நிறுத்தப்படுவது எப்போது என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை;

சென்னை புழலை அடுத்த புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்ற தனியார் வங்கி ஊழியர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.6 லட்சத்திற்கும் கூடுதலாக பணத்தை இழந்ததால், ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். முருகனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முருகனைப் போன்றவர்களுக்கு ரூ.6 லட்சம் என்பது மிகப்பெரிய தொகையாகும். வங்கி ஊழியர் என்ற முறையில் ஈட்டிய வருவாயை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்திருக்கிறார். அதன்பின் கடன் வாங்கியும் பெருந்தொகையை இழந்த நிலையில், வாங்கிய கடனை அடைக்கவே முடியாது எனும் சூழலில் தான் முருகன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இடைப்பட்ட காலத்தில் ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து விடுபட அவர் முயன்றாலும் அவரால் முடியவில்லை. அதனால் தான் ஆன்லைன் சூதாட்டத்தை ஒரு மாய ஆட்டம் என்று கூறி வருகிறேன். இதற்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும்.

முருகனின் தற்கொலை கடந்த 5 மாதங்களில் நிகழ்ந்த 12ம் தற்கொலை ஆகும். தி.மு.க., அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்த பிறகு மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 29 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இதுவரை 89 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரை இழந்துள்ளனர். இவ்வளவு பேர் இன்னுயிரை இழப்பதை தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கக் கூடாது.

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான சென்னை ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து 16 மாதங்களாகின்றன. ஆனால், இதுவரை ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை சுப்ரீம்கோர்ட்டில் விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது தான் இவ்வளவு உயிரிழப்புகளுக்கு காரணமாகும்.

இதை உணர்ந்து ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் குறித்த ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக தடை பெறுவது சாத்தியமில்லை என்றால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்வதற்காக புதிய சட்டத்தை சட்டசபையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us