Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/குறுவை தொகுப்புத் திட்டத்தை உடனே அறிவியுங்கள்: தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை

குறுவை தொகுப்புத் திட்டத்தை உடனே அறிவியுங்கள்: தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை

குறுவை தொகுப்புத் திட்டத்தை உடனே அறிவியுங்கள்: தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை

குறுவை தொகுப்புத் திட்டத்தை உடனே அறிவியுங்கள்: தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை

Latest Tamil News
சென்னை; குறுவைத் தொகுப்புத் திட்டத்தை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.5,000 மானியம் வேண்டும் என்று பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை;

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வரும் ஜூன் 12ம் தேதி காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவது உறுதியாகி விட்ட நிலையில், குறுவை சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்குவிப்பதற்கான குறுவைத் தொகுப்புத் திட்டம் இன்று வரை அறிவிக்கப்படவில்லை. காவிரி பாசன மாவட்ட உழவர்களின் நலனில் தமிழக அரசு அக்கறையின்றி செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

குறுவை பாசனத்திற்காக இன்னும் 3 வாரங்களில் காவிரியில் தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே குறுவைப் பாசனத்திற்கு காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் தயாராக வேண்டும். விதை விதைப்பது, நாற்றாங்கால்களைத் தயார் படுத்துவது போன்ற பணிகளை உழவர்கள் மேற்கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான விதை, உரங்கள், நுண்ணூட்டச் சத்துகள் போன்றவற்றை மானிய விலையில் வழங்குவது தான் குறுவைத் தொகுப்பு திட்டமாகும். அதை தாமதப்படுத்துவது எந்த வகையிலும் நியாயமல்ல.

நடப்பாண்டிலாவது வேளாண் துறை வளர்ச்சியை நேர்மறையாக மாற்ற சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். அதற்கு மாறாக வழக்கமான திட்டங்களையே தாமதப்படுத்தக்கூடாது. எனவே, குறுவைத் தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

கடந்த ஆண்டைப் போல ஒரு லட்சம் ஏக்கருக்கு மட்டும் தான் குறுவைத் தொகுப்பு உதவிகள் வழங்கப்படும் என்று இலக்கு நிர்ணயிக்காமல், அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். அத்துடன், குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தெலுங்கானா மாநிலத்தில் வழங்கப்படுவதைப் போன்று ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் ஊக்குவிப்பு மானியமும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us