Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ புதுச்சேரியை ஆன்மிக சுற்றுலா மையமாக மாற்ற திட்டம்

புதுச்சேரியை ஆன்மிக சுற்றுலா மையமாக மாற்ற திட்டம்

புதுச்சேரியை ஆன்மிக சுற்றுலா மையமாக மாற்ற திட்டம்

புதுச்சேரியை ஆன்மிக சுற்றுலா மையமாக மாற்ற திட்டம்

ADDED : ஜூன் 20, 2025 05:44 AM


Google News
Latest Tamil News
மதுரை: 'புதுச்சேரியை ஆன்மிக சுற்றுலா மையமாக மேம்படுத்துவதற்கான முயற்சி நடந்து வருகிறது,'' என, மதுரையில் புதுச்சேரி துணை நிலை கவர்னர் கைலாஷ்நாதன் தெரிவித்தார்.

மதுரையில் முருக பக்தர்களின் மாநாட்டை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளின் அருட்காட்சியை கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று பார்வையிட்டார். ஹிந்து முன்னணி சார்பில் அவருக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது. முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சன்னதியில் கவர்னர் தீபாராதனை காட்டி பூஜை செய்தார். அனைத்து படை வீட்டிற்கும் சென்று தரிசனம் செய்தார்.

பின் கவர்னர் கூறியதாவது: எங்கள் குலத்தெய்வம் முருகன். பழமொழியில் கூட சுக்குக்கு மிஞ்சிய வைத்தியம் இல்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை' என உள்ளது.முருக கடவுள் தீமைகளை அழிக்கும் குறியீடாக விளங்குகிறார். முருகனுக்கான விழாவை காணும் போது அதை புரிந்து கொள்ள முடியும்.

தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்கள், முருக கடவுளை சிறப்பாக கொண்டாடுகின்றனர். குஜராத்தில் நான் 45 ஆண்டுகள் வேலை செய்தாலும் முருக கடவுள் மீதான பக்தியை கைவிடவில்லை.

மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் கூட முருகனை வழிபடுகின்றனர். புதுச்சேரியில் உள்ள 'கவுஸ்' என்ற முருகன் கோயிலை, கவர்னராக பதவியேற்ற பின் சென்று வழிபட்டேன். அந்த கோயிலை ஒரு முஸ்லிம் தனது வேண்டுதல் நிறைவேறியதால் கட்டியதாக கூறப்படுகிறது. இன்றும் அந்த கோயிலில் சிறப்பு அபிஷேகம், பூஜையை முஸ்லிம் குடும்பம் செய்து வருகிறது.

வேறுவேறு சமயத்தை பின்பற்றினாலும், பண்பாட்டு ரீதியாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.புதுச்சேரியை ஆன்மிக சுற்றுலா மையமாக மேம்படுத்துவதற்கான முயற்சி நடக்கிறது. புதுச்சேரியை சுற்றிலும் பழமையான கோயில்களும், 21க்கு மேல் சித்தர் சமாதிகளும் உள்ளன. அவற்றை சுற்றுலா மையமாக மாற்ற ஆய்வு நடந்து வருகிறது என்றார்.

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், தென்பாரத அமைப்பாளர் பக்தன், பொதுச் செயலாளர் கிஷோர் குமார், மாநில அமைப்பாளர் ராஜேஷ் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us