நான்கு அரசு மருத்துவமனைகளில் 'பெட் ஸ்கேன்' வசதிக்கு அனுமதி
நான்கு அரசு மருத்துவமனைகளில் 'பெட் ஸ்கேன்' வசதிக்கு அனுமதி
நான்கு அரசு மருத்துவமனைகளில் 'பெட் ஸ்கேன்' வசதிக்கு அனுமதி
ADDED : ஜூன் 26, 2025 12:41 AM
சென்னை:நான்கு அரசு மருத்துவமனைகளில், புற்றுநோய் பரவலை கண்டறியும், 'பெட் ஸ்கேன்' வசதி ஏற்படுத்த, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை ராஜிவ்காந்தி, கோவை, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும், காஞ்சிபுரம் மாவட்டம், காரப்பேட்டை அண்ணா புற்றுநோய் மையத்திலும், 'பெட் ஸ்கேன்' வசதி உள்ளது.
'புதிதாக, சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனை, திருச்சி, விழுப்புரம், திருவள்ளூர் மருத்துவமனைகளில், 'பெட் ஸ்கேன்' வசதி, தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் சட்டசபையில் அறிவித்தார்.
இதை செயல்படுத்துவதற்காக நடத்தப்பட்ட ஆய்வில், திருவள்ளூர் மருத்துவமனையில், அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த முடியாது என்பது தெரிய வந்தது.
அதற்கு பதிலாக, திருப்பூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 'லினாக்' எனப்படும் அதிநவீன புற்றுநோய் கதிர்வீச்சு சாதனமும், சிகிச்சை கட்டமைப்பும் வர உள்ளதால், அங்கு, 'பெட் ஸ்கேன்' வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, தனியார் பங்களிப்புடன், கிண்டி, திருப்பூர், திருச்சி, விழுப்புரம் மருத்துவமனைகளில், 'பெட் ஸ்கேன்' வசதி ஏற்படுத்த, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அரசாணையை, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.