சரஸ்வதி மஹால் நுாலகத்தின் 5 ஆண்டு நிதிநிலை அறிக்கை தர உத்தரவு
சரஸ்வதி மஹால் நுாலகத்தின் 5 ஆண்டு நிதிநிலை அறிக்கை தர உத்தரவு
சரஸ்வதி மஹால் நுாலகத்தின் 5 ஆண்டு நிதிநிலை அறிக்கை தர உத்தரவு
ADDED : செப் 03, 2025 01:15 AM
மதுரை:தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நுாலகத்தை மாதிரி நுாலகமாக வகைப்படுத்த தாக்கலான வழக்கில், அதன் ஐந்தாண்டு நிதி நிலை அறிக்கை மற்றும் விபரங்களை அரசு தரப்பில் தாக்கல் செய்ய, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
சென்னையை சேர்ந்த பிரபாகரன் தாக்கல் செய்த பொதுநல மனு:
தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நுாலகம் ஆசியாவின் பழமையான நுாலகங்களில் ஒன்று. இது, 16ம் நுாற்றாண்டில் தஞ்சாவூர் நாயக்க மன்னர்கள் ஆட்சியில் நிறுவப்பட்டது. தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, உருது, மராத்தியில் 60,000 ஓலைச்சுவடிகள் உள்ளன. இவற்றை, 1.65 கோடி ரூபாயில் சீரமைக்க அரசு 2012ல் திட்டமிட்டது. இதை முழுமையாக செயல்படுத்தவில்லை. இதனால் அரிய ஓலைச்சுவடிகள், ஆவணங்கள் சேதமடைகின்றன.
தேசிய நுாலகங்கள் இயக்கத்தை 2014ல் துவக்கிய மத்திய கலாசாரத்துறை சார்பில், பின்தங்கிய மாவட்டங்களில் நுாலகங்களை மேம்படுத்தும் நோக்கில், 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சரஸ்வதி மஹால் நுாலகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தேசிய நுாலகங்கள் இயக்கத்தின் கீழ் சரஸ்வதி மஹால் நுாலகத்தை மாதிரி நுாலகமாக வகைப்படுத்தி, டிஜிட்டல் மயமாக்கி மேம்படுத்த நிதி ஒதுக்க வலியுறுத்தி மத்திய கலாசாரத்துறை செயலர், தமிழக தலைமை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் எஸ்.குமார் ஆஜரானார். தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான், 'இந்நுாலக பராமரிப்பிற்கான நிதியை அரசு வழங்கும். தேசிய நுாலகங்கள் இயக்கத்தின் கீழ் மாதிரி நுாலகமாக மாற்ற வேண்டிய அவசியமில்லை' என, வாதிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'நுாலகத்தின் ஐந்தாண்டு கால நிதிநிலை அறிக்கை, ஆண்டறிக்கை, அனுமதிக்கப்பட்ட மற்றும் காலியாக உள்ள பணியிட விபரங்களை அரசு தரப்பில் செப்., 16ல் தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டனர்.