ஆப்பரேஷன் ஹைட்ரா: சைபர் குற்றவாளிகள் கைது
ஆப்பரேஷன் ஹைட்ரா: சைபர் குற்றவாளிகள் கைது
ஆப்பரேஷன் ஹைட்ரா: சைபர் குற்றவாளிகள் கைது
ADDED : ஜூன் 03, 2025 03:04 AM

சென்னை: சென்னை, அசோக் நகரில் 'சைபர்' குற்றப்பிரிவு, மாநில தலைமையகம் செயல்படுகிறது. இதன் கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் தலைமையில், சைபர் குற்றவாளிகளை கைது செய்ய, 'ஆப்பரேஷன் ஹைட்ரா' என்ற பெயரில் தேசிய அளவில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
திருமண வலைதளம் வாயிலாக வெளிநாட்டு மாப்பிள்ளை போல் நடித்தும், 'ஆன்லைன்' முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறியும், பணமோசடியில் ஈடுபட்ட, உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த மொஹம்மத் தாவூத், 21; மொஹம்மத் வாசீம், 34 ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் சேவை மைய அதிகாரி போல் நடித்து, பண மோசடி செய்த, ஜார்க் கண்ட் மாநிலத்தை சேர்ந்த பங்கஜ்குமார், 40, அசாம் மாநிலத்தை சேர்ந்த ஹிடேஷ்வர் பிஸ்வாஸ், 30; நிஹார் ரஞ்சன் நாத், 51 ஆகியோர் கைதாகி உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ - மாணவியருக்கு, அரசு கல்வி உதவித்தொகை வழங்குவதாக பண மோசடி நடந்தது தொடர்பான வழக்கில், டில்லியை சேர்ந்த ப்ரீத்தி நிக்கோலஸ், 30; மேஷக், 19 ஆகியோர் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.
சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக, 'ஆப்பரேஷன் ஹைட்ரா' சிறப்பு நடவடிக்கை வாயிலாக ஒரு பெண் உட்பட மொத்தம் ஏழு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து எட்டு ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.
'ஹைட்ரா' பெயர் ஏன்?
'ஹைட்ரா' என்பது வெட்டிப்போட்டாலும் வளரும் நீர்வாழ் உயிரினம். இதற்கு பல விழுதுகள் உண்டு. அனைத்து திசைகளிலும் செல்லக்கூடியது. சைபர் குற்றமும் அப்படிப்பட்டது என்பதால், சிறப்பு நடவடிக்கைக்கு ''ஹைட்ரா' என பெயர் வைக்கப்பட்டது.