Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/உங்களில் ஒருவன்: கிளாம்பாக்கம் பஸ் நிலைய குளறுபடி சரி செய்யாவிட்டால் போராட்டமே தீர்வு

உங்களில் ஒருவன்: கிளாம்பாக்கம் பஸ் நிலைய குளறுபடி சரி செய்யாவிட்டால் போராட்டமே தீர்வு

உங்களில் ஒருவன்: கிளாம்பாக்கம் பஸ் நிலைய குளறுபடி சரி செய்யாவிட்டால் போராட்டமே தீர்வு

உங்களில் ஒருவன்: கிளாம்பாக்கம் பஸ் நிலைய குளறுபடி சரி செய்யாவிட்டால் போராட்டமே தீர்வு

ADDED : பிப் 12, 2024 04:05 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பண்டைய பாரம்பரியத்தை போற்றி பாதுகாக்கும் புனித பூமியான உத்திரமேரூர்; 1,000 கோவில்களின் நகரம் என்று அறிஞர்களாலும், ஆன்மிக அன்பர்களாலும் கொண்டாடப்படும் காஞ்சிபுரம்; வேகமான சென்னை வளர்ச்சியில் தன்னையும் இணைத்துக் கொண்ட பூந்தமல்லி ஆகிய மூன்று சட்டசபை தொகுதியிலும், தமிழக பா.ஜ.,வின் பாதயாத்திரை பயணம் சிறப்புற நடந்தது.

நாடக பாணி அரசியலை நடத்திக் கொண்டிருக்கும் தி.மு.க., போல, வார்த்தை சித்து விளையாட்டுக்கோ அல்லது அடுக்கு மொழி வசனத்திற்காகவோ, இதை எல்லாம் நான் சொல்லவில்லை.

அலை கடலென திரண்டு வரும் மக்கள் கூட்டத்தையும், அவர்கள் காட்டும் ஆர்வத்தையும், அவர்களின் விழிகளில் தெரியும் நம்பிக்கையையும் முழுதும் அறிந்து கொண்டதாலேயே சொல்கிறேன்.

உத்திரமேரூர்


ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, உத்திரமேரூர் கல்வெட்டுகளின் சிறப்பம்சம் பற்றி, பிரதமர் மோடி மூன்று முறை குறிப்பிட்டதை, பெருமைக்குரிய விஷயமாக, அத்தொகுதி மக்கள் பார்க்கின்றனர்.

அந்தக் கால தேர்தல் நடைமுறைகள் குறித்து, கல்வெட்டு விளக்குவதை எடுத்துரைத்த பிரதமர், அதை வார்த்தையாக விட்டு விடவில்லை; கல்வெட்டின் நகலை எடுத்து பார்லிமென்டில் வைத்து உள்ளார்.

வாரிய பதவியில் குடும்பத்தினர் ஒரு ஆண்டு இருந்தால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை; 35 வகையான குற்றங்களை செய்தோர் போட்டியிட தகுதியில்லை என்றும், கல்வெட்டில் உள்ளது. அந்த கல்வெட்டு சொல்லும் செய்திகளின்படி பார்த்தால், தற்போதைய தி.மு.க.,வில் இருக்கும் ஒருவர் கூட தேர்தலில் போட்டியிட முடியாது.

பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட உத்திரமேரூர் ஏரி, 5,436 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி வழங்குகிறது. இந்த ஏரியை துார்வாரினால், பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

உத்திரமேரூரில் விவசாய நிலங்களுக்கு மத்தியில், தொகுதி எம்.எல்.ஏ.,வும், சென்னையிலிருந்து வருவோரும் கல் குவாரி அமைத்துள்ளனர். முறைகேடான இந்த கல் குவாரிகளுக்கு எதிரான போராட்டத்தில், மக்களுடன் பா.ஜ., இணையும்; குவாரிகளை தடுக்கமுழுமையாக போராடும்.

காஞ்சிபுரம்


காஞ்சிபுரம் பட்டு என்பது உலகப் புகழ் பெற்றது. இந்த நகரத்தில், 15,000த்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உள்ளனர். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட, 7 கோடி ரூபாய்க்கு பட்டு வர்த்தகம் நடக்கிறது.

சமீபத்தில், 'ஜி - 20' மாநாட்டின் போது, பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமருக்கு காஞ்சிபுரம் பட்டு சால்வையை பரிசாக வழங்கினார்.

கடந்த 2023 ஏப்ரலில், ஹிந்து சமய அறநிலைய துறை சார்பில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, 25 கோடி ரூபாய்; செரப்பணஞ்சேரி வீமீஸ்வரர் கோவிலுக்கு, 7 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடக்கும் என, அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

சொன்னபடி எதையும் செய்யவில்லை. பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், மக்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கு ஏற்ப, அறமற்ற அறநிலையத் துறை கலைக்கப்படும்.

நிர்வாக தோல்வி


கோயம்பேடு பஸ் நிலைய இடத்தை கைப்பற்றும் நோக்கோடு, தி.மு.க., அரசு அவசரகதியில் பஸ் நிலையத்தை திறந்து, 40 கி.மீ., தொலைவிலுள்ள கிளாம்பாக்கத்துக்கு மாற்றியது. அங்கு ஏராளமான பிரச்னைகள் உள்ளன; எதையும் தீர்க்கவில்லை.

அரசின் நிர்வாக குளறுபடியால், சென்னையின் பல பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரும் பயணியர், ஊருக்குச் செல்ல பஸ் இன்றி, நள்ளிரவில் தினமும் அவதிப்படுகின்றனர். சாலை மறியல் செய்தும், பஸ்களை சிறை பிடித்தும், மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டுகின்றனர்.

பஸ் நிலையம் முழுமையான செயல்பாட்டுக்கு வந்து விட்டதாக கூறும் அரசு, போதுமான பஸ்களை ஏற்பாடு செய்யாதது ஏன்? நிர்வாகம் முழுதும் தோற்றிருக்கிறது. தோல்வியை ஒப்புக்கொண்டு, அதைச் சரி செய்யும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

கிளாம்பாக்கம் பஸ் நிலையம் முழுதும் தயாராகும் வரை, பஸ்களை மீண்டும் கோயம்பேடில் இருந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால், விரைவில் மிகப் பெரிய போராட்டத்தை பா.ஜ., முன்னெடுக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us