ஆம்னி பஸ்கள் நிறுத்தம்: ஊட்டியில் 2 பஸ் பறிமுதல்
ஆம்னி பஸ்கள் நிறுத்தம்: ஊட்டியில் 2 பஸ் பறிமுதல்
ஆம்னி பஸ்கள் நிறுத்தம்: ஊட்டியில் 2 பஸ் பறிமுதல்
ADDED : ஜூன் 20, 2024 02:21 AM
சென்னை:
வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னிகள் நேற்று ஓடவில்லை. இருப்பினும், கண்காணிப்பு பணியை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு பெற்ற வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள், தமிழகத்தில் பயணியர் பஸ்களாக செயல்படுவதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதனால், வெளி மாநில பதிவெண் ஆம்னி பஸ்களை, தமிழகத்தில் மறுபதிவு செய்யுமாறு, போக்குவரத்துத் துறை உத்தரவிட்டது.
அதற்காக அளித்த அவகாசம் முடிந்ததால், வெளி மாநில பதிவெண் கொண்ட 800 ஆம்னி பஸ்களை, தமிழகத்தில் இயக்க, அரசு போக்குவரத்து துறை நேற்று முன்தினம் முதல் தடை விதித்தது. தடையை மீறி இயக்கினால், பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்தது.
இதையடுத்து, 800 பஸ்களில் தற்போது இயக்கத்தில் உள்ள 547 ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படும் என, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இருப்பினும், விதிமீறி பஸ்களை இயக்கினால், நடவடிக்கை எடுக்க போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள், நேற்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஊட்டியில் சுற்றுலா பயணியருக்காக இயக்கப்பட்ட இரண்டு ஆம்னி பஸ்கள், நேற்று மாலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து, ஊட்டி வட்டார போக்குவரத்து அதிகாரி தியாகராஜன் கூறுகையில், ''ஊட்டி சுற்றுலா வந்த புதுச்சேரி, நாகாலாந்து பதிவெண் கொண்ட இரு ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன,'' என்றார்.
புகார்
இது குறித்து, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் கூறியதாவது:
சென்னை கோயம்பேடு நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்களை பறிமுதல் செய்ய, அதிகாரிகள் வந்தனர்.
ஆனால், ஊட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, போக்குவரத்து ஆணையரகத்தில் மறுபதிவுக்கு விண்ணப்பிக்க சென்றபோது, விண்ணப்பங்களை பெற மறுக்கின்றனர். மறுபதிவு செய்யாமல் எப்படி பஸ்களை இயக்க முடியும்?
இவ்வாறு கூறினார்.