விடியல் பயணத்திற்கு புதிய பஸ்கள்: பெண்கள் ஓட்டுகளை கவர யுக்தியா
விடியல் பயணத்திற்கு புதிய பஸ்கள்: பெண்கள் ஓட்டுகளை கவர யுக்தியா
விடியல் பயணத்திற்கு புதிய பஸ்கள்: பெண்கள் ஓட்டுகளை கவர யுக்தியா
ADDED : ஜூன் 16, 2025 05:35 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழகத்தில் பெண்களின் ஓட்டுகளை கவரும் வகையில் அவர்களுக்கான விடியல் பயணத்திற்கு தென் மாவட்டங்களில் புத்தம் புதிய டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது வரும் சட்டசபை தேர்தலில் பெண்களின் ஓட்டுகளை தி.மு.க., கவருவதற்கான யுக்தி என அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தெரிவித்தனர்.
2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் அரசு டவுன் பஸ்சில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்க மகளிர் விடியல் பயணம் திட்டத்தை செயல்படுத்துவோம் எனக் கூறியது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட 5 உத்தரவுகளில் இலவச பயண திட்டமும் ஒன்று.
இது பெண்களிடம் வரவேற்பு பெற்ற போதிலும், பஸ்களின் உட்பகுதியில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதால் பெண்கள் அதிருப்தி அடைந்தனர்.
இப்பஸ்களில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை குறித்து தினமும் தரவுகளை மாநில அரசு நிர்வாகம் சேகரித்த போதிலும், குறைபாடு உள்ள பஸ்கள், வழித்தடம் மாற்றி இயக்குதல், நேர கால அட்டவணைப்படி இயங்காத நிலையால் இலவசத்தை யார் கேட்டார்கள் என பெண்களே வாக்குவாதம் செய்யும் சம்பவங்கள் பல இடங்களில் நடந்தன.
இந்நிலையில் விடியல் பயணத் திட்டத்தை செம்மைப்படுத்தி பெண்களிடம் அரசுக்கு நல்ல பெயர் ஏற்படுத்துவதற்கு, தற்போது தமிழகத்தில் பெரும்பாலான தென் மாவட்டங்களில் புத்தம் புதிய டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனை அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களே கொடியசைத்து துவக்கியும் உள்ளனர்.
சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில் விடியல் பயணத்திற்கு புதிய டவுன் பஸ்கள் இயக்குவதன் மூலம் பெண்களிடம் தி.மு.க. அரசுக்கு நற்பெயரை பெற்றுத்தரும் யுக்தியாக இருக்கும் என போக்குவரத்து கழக ஊழியர்கள் தெரிவித்தனர்.