மதுரை ஓமியோபதி கல்லுாரிக்கு ரூ.70 கோடியில் புதிய கட்டடம்
மதுரை ஓமியோபதி கல்லுாரிக்கு ரூ.70 கோடியில் புதிய கட்டடம்
மதுரை ஓமியோபதி கல்லுாரிக்கு ரூ.70 கோடியில் புதிய கட்டடம்
ADDED : ஜன 07, 2024 01:49 AM
சென்னை:''மதுரை ஓமியோபதி கல்லுாரி சேதமடைந்துள்ள நிலையில், 70 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னையில், கேப்டன் சீனிவாசன் மூர்த்தி மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிலைய வைர விழா கொண்டாடப்பட்டது.
இதில், மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் முஞ்ஜ்பரா மகேந்திரபாய் பங்கேற்று பேசியதாவது:
இந்த ஆயுர்வேத ஆராய்ச்சி நிலையம், மருந்து தரத்தை நிலைப்படுத்துதல், மருந்தியல் ஆராய்ச்சி மற்றும் மருந்தியல் ஆய்வுகள் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த வகையில், எட்டு ஆராய்ச்சிகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளது. மேலும், 86க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
இது போன்ற ஆராய்ச்சி முறைகள், ஆயுஷ் மருத்துவ முறைகளின் மீதான நம்பிக்கையை உலகளவில் உயர்த்தும். சமூக நல்வாழ்வுக்கு பங்களிக்கும் வகையில், ஆயுஷ் மருத்துவத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
இந்தியாவில் வேறு மாநிலங்களில் இல்லாத வகையில், தமிழகத்தில் இந்திய முறை மருத்துவத்திற்கு கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஏழு அரசு மற்றும் 43 தனியார் என, 50 ஆயுஷ் முறை மருத்துவக் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன.
மதுரை ஓமியோபதி அரசு மருத்துவக் கல்லுாரியின் கட்டடம் சேதமடைந்து உள்ளது. எனவே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் அருகே, 70 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.
பரம்பரை சித்த மருத்துவர்களுக்கு ஓய்வூதியம், 1,000 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது.
பள்ளி மாணவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில், 1.92 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில், 200 ஏக்கர் பரப்பளவில் மூலிகை பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
சித்தா பல்கலைக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க, மத்திய அரசு வலியுறுத்துவதுடன், திருச்சியில் சித்தா எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.