'கோலிவுட்'டில் போதை பொருள் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை
'கோலிவுட்'டில் போதை பொருள் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை
'கோலிவுட்'டில் போதை பொருள் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை
ADDED : ஜன 12, 2024 11:48 PM
சென்னை:போதை பொருள் கடத்தல் கும்பல், 'கோலிவுட்'டில் மையம் கொண்டு இருப்பதால், என்.ஐ.ஏ., அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுதலைப்புலிகள் அமைப்பை புனரமைக்க, போதை பொருள், ஆயுதங்கள் கடத்தியதாக, 2023 ஆகஸ்டில், சென்னையைச் சேர்ந்த ஆதிலிங்கம், 43, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர்.
இது குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:
விடுதலைப்புலிகள் அமைப்பை புனரமைக்க போதை பொருள், ஆயுதங்கள் கடத்தும் பொறுப்பு, சென்னை வளசரவாக்கத்தில் தங்கியிருந்த சபேசன் எனும் சற்குணத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. இவருக்கு கீழ் தான் ஆதிலிங்கம் செயல்பட்டுள்ளார்.
இவர்கள், தமிழ் சினிமா வட்டாரங்களே கதி என இருந்துள்ளனர். இருவரும் கைதாகியுள்ள நிலையில், கோலிவுட்டில் தங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்கள் குறித்து, ஆதிலிங்கம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆதிலிங்கம், சற்குணம் ஆகியோரின் மொபைல் போனில் இருந்தும் தகவல்கள் திரட்டப்பட்டு உள்ளன.
இவர்களுடன் அரசியல் கட்சியை சார்ந்துள்ள இயக்குனர் ஒருவரும் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். அவருக்கும், விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும், போதை பொருள் கடத்தலுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரித்து வருகிறோம்.
தற்போதும், கோலிவுட் வட்டாரங்களில் மையம் கொண்டுள்ள கும்பல், போதை பொருள் விற்பதன் வாயிலாக புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருவது குறித்து, ஆதிலிங்கம் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.