'அமலாக்கத்துறை பெயரை கேட்டாலே தி.மு.க.வினருக்கு துாக்கம் வருவதில்லை'
'அமலாக்கத்துறை பெயரை கேட்டாலே தி.மு.க.வினருக்கு துாக்கம் வருவதில்லை'
'அமலாக்கத்துறை பெயரை கேட்டாலே தி.மு.க.வினருக்கு துாக்கம் வருவதில்லை'
UPDATED : மே 22, 2025 05:59 AM
ADDED : மே 22, 2025 05:40 AM

சென்னை : ''டாஸ்மாக்கில் ஊழல் செய்திருப்பதால் தான் அமலாக்க துறை விசாரிக்கிறது; அமலாக்க துறை பெயரை கேட்டாலே, தி.மு.க.,வினருக்கு துாக்கம் வருவதில்லை,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை பெருகி உள்ளது. போதைப் பொருள் கலாசாரம் அதிகரித்துள்ளது. கள்ளச்சாராயம் விற்காமலிருக்கதான், 'டாஸ்மாக்' துவக்கப்பட்டது. தற்போது, டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. இதனால் தான் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. டாஸ்மாக் மது கொள்முதல், பார் உரிமம் வழங்குவது என, அனைத்து ஊழல்கள் பின்னணியிலும், ரத்தீஷ் என்பவர் இருக்கிறார். அவர், துணை முதல்வர் உதயநிதிக்கு வேண்டியவர்.
டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் செய்தது போல், தமிழகத்தில் டாஸ்மாக்கில், தி.மு.க., ஊழல் செய்துள்ளது. இதில், உடனே மத்திய அரசு தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தவித ஆதாரமும் இல்லாமல், அமலாக்க துறை விசாரிக்கவில்லை.
அதிகாரிகள், பணம் சம்பாதித்து தரக் கூடிய ஏஜன்ட் போல் செயல்பட்டுள்ளனர். பிரதமரிடம், முதல்வர் ஸ்டாலின் என்ன சொல்லப் போகிறார் என்பது வேறு; பிரதமரை சந்திக்க திட்டம் வைத்திருந்தது உண்மை தானே. தமிழக மக்களின் நலனுக்காக ஸ்டாலின், எந்த உதவி கோரினாலும், அதை மத்திய அரசு செய்யும். இதற்கு, தமிழக பா.ஜ., உறுதுணையாக இருக்கும்.
அமலாக்க துறை பெயரை கேட்டாலே, தி.மு.க.,வினருக்கு துாக்கம் வருவதில்லை. அது, தனி அமைப்பு. தேவையில்லாமல் யார் வீட்டிற்கும் செல்லாது. தவறு நடந்திருப்பதால் தான் அமலாக்க துறை விசாரிக்கிறது. லஞ்ச ஒழிப்பு துறை, வழக்கு பதிவு செய்ததைத் தொடர்ந்து, அமலாக்க துறை விசாரிக்கிறது. மாநில அரசு, மத்திய அரசுடன் சுமூகமான உறவு வைத்துக் கொண்டு, நிதியை வாங்கி மக்களுக்கு செலவிட வேண்டும். ஆனால் மத்திய அரசை, எதற்கெடுத்தாலும் தி.மு.க., எதிர்த்து வருகிறது. இவ்வாறு நாகேந்திரன் கூறினார்.