கீழடி அகழாய்வு கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்க இன்னும் அறிவியல்பூர்வ சான்றுகள் தேவை: மத்திய அமைச்சர் ஷெகாவத்
கீழடி அகழாய்வு கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்க இன்னும் அறிவியல்பூர்வ சான்றுகள் தேவை: மத்திய அமைச்சர் ஷெகாவத்
கீழடி அகழாய்வு கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்க இன்னும் அறிவியல்பூர்வ சான்றுகள் தேவை: மத்திய அமைச்சர் ஷெகாவத்

சென்னை:''கீழடி அகழாய்வுகள் கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்க, இன்னும் அறிவியல்பூர்வ சான்றுகள் தேவை,'' என, மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின், 11 ஆண்டு கால சாதனை மலரை, சென்னை தி.நகர் கமலாலயத்தில், மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான கஜேந்திர சிங் ஷெகாவத் நேற்று வெளியிட, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், முன்னாள் கவர்னர் தமிழிசை, தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் அளித்த பேட்டி:
பிரதமர் மோடியின், 11 ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில், 30 கோடி ஏழைகள், வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.
மோடி தலைமையில் ஊழல் இல்லாத, வெளிப்படையான நிர்வாகம் நடக்கிறது. ஏழை மக்களின் நலன் காக்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
உலகம் முழுதும் மதிக்கத்தக்க நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. வரும், 2047ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற லட்சியத்தோடு, எதிர்கால இந்தியாவுக்கு பலமான அடித்தளத்தை, பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார்.
ராணுவ சாதனங்கள், மொபைல் போன்களை, இந்தியா இறக்குமதி செய்த நிலையில், தற்போது அவற்றை ஏற்றுமதி செய்து வருகிறோம்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்காக, பாகிஸ்தானுக்கு தக்க பதிலடியை இந்தியா கொடுத்தது. பயங்கரவாதிகளின் முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன.
தமிழகத்தில் நடக்கும் கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள், அறிவியல் பூர்வமாக, தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
அங்கீகாரம் வழங்குவதற்கு முன், அதிக நடைமுறைகள் உள்ளன. அதற்கு இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன. அவ்வாறு, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதும் அங்கீகாரம் வழங்கப்படும்.
இது, மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால், நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தமிழ் மிகவும் தொன்மையான மொழி. தமிழின் பெருமையை உலகளவில் பிரதமர் மோடி கொண்டு சேர்க்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.