பருவமழை: 8 மாவட்டங்களில் பாதிப்பு 5.23 லட்சம் ஏக்கரில் பயிர் போச்சு
பருவமழை: 8 மாவட்டங்களில் பாதிப்பு 5.23 லட்சம் ஏக்கரில் பயிர் போச்சு
பருவமழை: 8 மாவட்டங்களில் பாதிப்பு 5.23 லட்சம் ஏக்கரில் பயிர் போச்சு
ADDED : ஜன 10, 2024 11:20 PM
சென்னை:கொட்டி தீர்த்த வடகிழக்கு பருவமழையால், எட்டு மாவட்டங்களில், 5.23 லட்சம் ஏக்கர் பயிர் பாதிக்கப்பட்டதாக, வேளாண் துறை, இறுதி அறிக்கையை, தமிழக அரசிடம் சமர்ப்பித்து உள்ளது.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில், கனமழை பெய்தது. இதனால், பல லட்சம் ஏக்கர் வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டன.
அரசு உத்தரவை அடுத்து, பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு பணியை, வேளாண் துறையினர் மேற்கொண்டனர்; அரசிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி, சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில், 5.23 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
அதிகபட்சமாக, துாத்துக்குடி மாவட்டத்தில் மட்டும், 2.87 லட்சம் ஏக்கரில் வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இம்மாவட்டங்களில், 33 சதவீதம் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு, 2.4 ஏக்கர் அளவான, 1 ஹெக்டருக்கு, 17,000 ரூபாய், பல்லாண்டு பயிர்களுக்கு, 22,500 ரூபாய், மானாவரி பயிர்களுக்கு 8,500 ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
வேளாண் துறை அளித்த பயிர் பாதிப்பை கணக்கை, இறுதி மதிப்பீடு செய்யும் பணி, மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.
இப்பணி முடிந்த பின், பொங்கல் பண்டிகைக்கு பின், விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு வழங்கப்படும் என, வேளாண் துறையினர் தெரிவித்துஉள்ளனர்.