மொபைல் செயலி பயன்பாடு: ஆறு மாதங்களாக காத்திருக்கும் தகவல் ஆணைய அதிகாரிகள்
மொபைல் செயலி பயன்பாடு: ஆறு மாதங்களாக காத்திருக்கும் தகவல் ஆணைய அதிகாரிகள்
மொபைல் செயலி பயன்பாடு: ஆறு மாதங்களாக காத்திருக்கும் தகவல் ஆணைய அதிகாரிகள்

சென்னை: மாநில தகவல் ஆணை யத்திற்கென தனி மொபைல் செயலி தயாரான நிலையில், அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர, 'எல்காட்' நிறுவனம் தாமதம் செய்து வருவது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மாநில தகவல் ஆணையத்தின் இணையதளம், ஓராண்டுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இதனால், ஆணையத்தின் புதிய அறிவிப்புகள், தீர்ப்புகள் மற்றும் மனு மீதான நடவடிக்கை விபரங்களை பொதுமக்கள் பெற முடியாத சூழல் உள்ளது.
இந்நிலையில், மாநில தகவல் ஆணையத்தின் செயல்பாடுகளை அனைவரும் தெரிந்து கொள்ள, தனியார் நிறுவன உதவியுடன், மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதை செயல்பாட்டிற்கு கொண்டு வராமல், எல்காட் நிறுவனம் காலதாமதம் செய்து வருகிறது.
கடந்த ஆறு மாதங்களாக செயலிக்காக, மாநில தகவல் ஆணைய அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
புதிதாக உருவாக்கப்பட்ட மொபைல் செயலியில், மக்கள் தங்கள் மொபைல் எண், ஆதார் எண் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி உள்நுழையலாம். அதில், எளிதாக தங்கள் கோரிக்கைகள் மற்றும் மேல்முறையீடுகளை கோர முடியும்.
மனு மீதான நடவடிக்கை மற்றும் தீர்ப்புகள் குறித்த தகவல்களையும் பெற முடியும். செயலி உருவாக்கப்பட்டு ஆறு மாதங்களாகியுள்ள நிலையில், அதை பயன்பாட்டுக்கு கொண்டு வர, 'கிளவுட் ஸ்பேஸ்' சேவை வசதி தேவைப்படுகிறது.
இந்த சேவைக்கு தனியார் நிறுவனங்கள், ஆண்டுக்கு, 3 லட்சம் ரூபாய் வரை கட்டணம் கேட்கின்றன.
அதை செலுத்த முடியாது என்பதால், எல்காட் நிறுவனத்தின் உதவியை நாடினோம். அவர்களும் இழுத்தடிக்கின்றனர். ஆறு மாதங்களாக எல்காட் நிறுவனத்தின் உதவிக்காக காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.