அரசாணை பிறப்பித்தும் சாலை பணி மந்தம் அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலு 'டோஸ்'
அரசாணை பிறப்பித்தும் சாலை பணி மந்தம் அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலு 'டோஸ்'
அரசாணை பிறப்பித்தும் சாலை பணி மந்தம் அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலு 'டோஸ்'
ADDED : ஜூன் 28, 2025 07:12 PM
சென்னை:அரசாணை பிறப்பித்தும், சில புறவழிச்சாலை பணிகள் மந்தமாக நடப்பதாக, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு, 'டோஸ்' விட்ட அமைச்சர் வேலு, அப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
சட்டசபையில், பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கை தாக்கலின் போது, நெடுஞ்சாலைத் துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இத்திட்டங்கள் செயலாக்கம் தொடர்பாக துறை அமைச்சர் வேலு, நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர்களுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். நெடுஞ்சாலைத் துறை செயலர் செல்வராஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
ஆய்வு கூட்டம்
இந்த கூட்டத்தில், அமைச்சர் வேலு பேசியதாவது:
தலைமை பொறியாளர்கள் அனைவரும், கோட்ட பொறியாளர்களுடன் இணைந்து, தலைமை அலுவலகத்தில் மாதம் ஒருமுறை பணிகளின் நிலை, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு, நிலம் எடுப்பு, நீதிமன்ற வழக்குகள் போன்ற முக்கிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
அமைச்சர் தலைமையில் தலைமை பொறியாளர்கள் பங்கேற்கும் ஆய்வு கூட்டம் நடத்துவதற்கு முன், கண்காணிப்பு பொறியாளர்கள், கோட்ட பொறியாளர்கள், உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும். இதை கண்காணிப்பு பொறியாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
தலைமை பொறியாளர்கள் மாதத்தில் குறைந்தபட்சம், 10 நாட்கள் நேரடியாக களத்திற்கு சென்று சாலை பணிகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
சாலை பணிகள் நடக்கும் இடங்களில், பொது மக்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். சாலைகளின் குறுக்கே பாலங்கள் கட்டும்போது, தடுப்பு வேலிகள் வலிமையாக அமைக்கப்பட வேண்டும்.
நடவடிக்கை
அங்கு இரவில் ஒளிரும், 'ஸ்டிக்கர்' மற்றும் ஒளிரும் பிரதிபலிப்பான்கள் வைக்கப்பட வேண்டும். கவனக்குறைவு மற்றும் கடமையில் அலட்சியமாக செயல்பட்டால், சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிதாக போடப்படும் சாலைகளுக்கு தரம் முக்கியம். அவற்றை பல்வேறு கட்டடங்களில் தரக்கட்டுப்பாட்டு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். முக்கியமான சாலை, மேம்பால திட்டங்கள் நிலை குறித்து, 15 நாட்களுக்கு ஒருமுறை அரசுக்கும், துறை செயலருக்கும் அறிக்கை சமர்பிக்க வேண்டும்.
சென்னை தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை உயர்மட்ட பாலம், மதுரை அப்பல்லோ பாலம், ராஜாஜி சந்திப்பு பால பணிகளை தனிக்கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும்.
அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டும் சில புறவழிச்சாலை பணிகள் நிறைவு பெறாமல் உள்ளன; இதை ஏற்க முடியாது. இதில் தலைமை பொறியாளர்கள் தனி கவனம் செலுத்தி, உடனடியாக பணிகளை முடிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் வேலு பேசினார்.