கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை அமைச்சர் சுப்பிரமணியன் திட்டவட்டம்
கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை அமைச்சர் சுப்பிரமணியன் திட்டவட்டம்
கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை அமைச்சர் சுப்பிரமணியன் திட்டவட்டம்
ADDED : ஜூன் 11, 2025 01:47 AM
புதுக்கோட்டை:''இந்திய அளவிலும், தமிழகத்திலும், கொரோனாவால் தற்போது வரை எந்த ஒரு உயிரிழப்பும் இல்லை. ஆனால், தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது,'' என, தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற, தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
ஆரம்ப சுகாதார நிலையங்களில், 2026ல் உருவாகக்கூடிய காலி பணியிடங்களை மனதில் வைத்து தான், மூன்று மாதங்களுக்கு முன், 2,642 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. தற்போது, ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவர்கள் உள்ளனர்.
ஆறு மாதமாக காலி பணியிடம் எதுவும் இல்லை. இதில், 2,642 பணியிடங்களுக்கு பணியாணை கொடுத்தும், மூன்று மாதமாக பணியில் சேராமல் இருந்த 27 பேருக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.
இன்னும், 248 பேருக்கு ஜூலை மாதத்துடன் பணியில் சேர்வதற்கான காலம் முடிவடைகிறது. அவர்களும் சேரவில்லை என்றால், அவர்களது பணி ஆணையை ரத்து செய்து விட்டு, ஏற்கனவே தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்ற, அதே வகுப்பை சேர்ந்தவர்களுக்கு பணி வழங்கப்படும். இந்திய அளவிலும், தமிழகத்திலும் கொரோனாவால் எந்த ஓர் உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஆனால், தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. தற்போது பரவும் கொரோனா வீரியம் குறைவாக உள்ள ஒமைக்ரான் வகையை சேர்ந்தது. உலகம் முழுதும் இந்த கொரோனா உள்ளது.
பதற்றத்தை ஏற்படுத்தக்கூடாது. பொதுமக்களுக்கு பொதுவான அறிவுறுத்தலோ, சட்டமோ, கட்டாயமோ எதுவும் இல்லை. அதே நேரத்தில், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், இணை நோய் பாதிப்பு இருப்பவர்கள், கர்ப்பிணியர், வயதானவர்கள் பொது இடங்களில் முக கவசம் அணிந்து கொள்வது நல்லது.
அண்டை மாநிலங்களில் இருந்து வருபவர்களை கண்காணித்து பரிசோதனை செய்ய எந்த அவசியமும் இல்லை. கண்காணித்து பரிசோதனை செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளையும் மத்திய சுகாதாரத்துறை விதிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.