அரசு நிலம் அபகரிப்பு வழக்கில் ஜூலை 24 வரை அமைச்சருக்கு கெடு
அரசு நிலம் அபகரிப்பு வழக்கில் ஜூலை 24 வரை அமைச்சருக்கு கெடு
அரசு நிலம் அபகரிப்பு வழக்கில் ஜூலை 24 வரை அமைச்சருக்கு கெடு
ADDED : ஜூன் 18, 2025 03:27 AM

சென்னை: அரசு நிலத்தை போலி ஆவணங்கள் வாயிலாக அபகரித்த வழக்கில், ஜூலை 24ம் தேதி அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மனைவி ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என, சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை, கிண்டி தொழிலாளர் காலனியில், எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த குடியிருப்பை, தற்போதைய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது, போலி ஆவணங்கள் வாயிலாக, அதிகார துஷ்பிரயோகம் செய்து, தன் மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் புகாரின்படி, அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா ஆகியோருக்கு எதிராக, 2019ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மனைவி ஆகியோர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மனைவி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு, நீதிபதி என்.வெங்கடவரதன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் சுப்பிரமணியன் தரப்பில், 'வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். தற்போது கோடை விடுமுறை காரணமாக, அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை. எனவே, குற்றச்சாட்டு பதிவு தள்ளிவைக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, 'இதற்கு மேல் எவ்வித கூடுதல் கால அவகாசமும் வழங்க முடியாது' என கூறி, விசாரணையை ஜூலை 24ம் தேதிக்கு தள்ளி வைத்தார். 'அதற்குள் உச்ச நீதிமன்றத்தில் முறையான உத்தரவை பெறாதபட்சத்தில், ஜூலை 24ம் தேதி, சுப்பிரமணியன், அவரது மனைவி ஆகியோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்' என, நீதிபதி அறிவித்தார்.